குல்பூஷன் ஜாதவை இந்திய அதிகாரிகள் 2-வது முறை சந்திக்க அனுமதி கிடையாது : பாகிஸ்தான்

குல்பூஷன் ஜாதவை தூதர்கள் சந்திக்க இனி அனுமதி கிடையாது என்று பாகிஸ்தான் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குல்பூஷன் ஜாதவை இந்திய அதிகாரிகள் 2-வது முறை சந்திக்க அனுமதி கிடையாது : பாகிஸ்தான்
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவை, இந்திய தூதர்கள் சந்திக்க இனி அனுமதி அளிக்கப்படமாட்டாது என்று பாகிஸ்தான் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின் படி, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி முகம்மது பைசல் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஏற்கனவே இந்த மாத துவக்கத்தில் குல்பூஷன் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க பாகிஸ்தான் அனுமதி அளித்தது.

இதையடுத்து, ஜாதவை பாகிஸ்தானுக்கான இந்திய துணைத்தூதர் கவுரவ் அலுவாலியா சந்தித்தார். இந்த சந்திப்பு ஏறத்தாழ 1 மணி நேரம் நீடித்தது என தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் இது தொடர்பாக கூடுதல் தகவல் எதுவும் வெளியாகவில்லை.

குல்பூஷன் ஜாதவ் வழக்கின் முழு விவரம்

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவ் (வயது 49), தங்கள் நாட்டில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதுடன் உளவு வேலையிலும் ஈடுபட்டார் என்பது பாகிஸ்தானின் குற்றச்சாட்டு. அதன் அடிப்படையில் அவர் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி பலுசிஸ்தான் மாகாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் எனவும் பாகிஸ்தான் கூறியது.ஆனால் பாகிஸ்தானின் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. அவர் ஈரானில் இருந்து கடத்திக்கொண்டு வரப்பட்டு, கைது நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்பது இந்தியாவின் குற்றச்சாட்டு.

இருப்பினும், ஜாதவ் மீது பாகிஸ்தானில் உள்ள ராணுவ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை ராணுவ கோர்ட்டு, அவசர கோலத்தில் விசாரித்து அவர் குற்றவாளி என முடிவு செய்து, 2017-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 10-ந் தேதி மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு, மராட்டிய மாநிலம், சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த அவரது குடும்பத்தினரை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.கைது செய்து மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜாதவை ஒரு முறை கூட தூதரக ரீதியில் இந்திய தரப்பில் சந்திக்க பாகிஸ்தான் அனுமதிக்கவில்லை.

உடனடியாக இந்தியா அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. நெதர்லாந்து நாட்டில் திஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச கோர்ட்டில் இந்தியா முறையிட்டது. மூத்த வக்கீல் ஹரிஷ் சால்வேயை ஆஜராகி, வாதாட வைத்தது. ஜாதவை தூதரக ரீதியில் சந்தித்துப்பேசக்கூட வாய்ப்பு தரப்படவில்லை; இது 1963-ம் ஆண்டு, தூதரக உறவுகள் தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட வியன்னா உடன்படிக்கை விதிகளை மீறிய செயல் என்று இந்தியா சுட்டிக்காட்டியது.

அதைத் தொடர்ந்து ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, இந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை அமல்படுத்த தடை விதித்து பாகிஸ்தானுக்கு சர்வதேச கோர்ட்டு 2017-ம் ஆண்டு, மே மாதம் 9-ந் தேதி உத்தரவிட்டது.முடிவாக ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்திவைத்து கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி, சர்வதேச கோர்ட்டு தனது இறுதி தீர்ப்பை வழங்கியது.

மேலும், அவரது மரண தண்டனையை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது. அத்துடன் ஜாதவுக்கு தூதரக ரீதியிலான தொடர்புக்கு கூட வாய்ப்பு தராமல் பாகிஸ்தான் வியன்னா உடன்படிக்கையின் பிரிவு 36(1)-ஐ மீறி உள்ளது என சர்வதேச கோர்ட்டு தீர்ப்பில் கோடிட்டு காட்டியது. ஜாதவை இந்தியா தூதரக ரீதியில் சந்தித்துப்பேச அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com