

லண்டன்,
இங்கிலாந்து வடக்கு நகரமான லீட்ஸ் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நரேந்திர கில். இந்த நிலையில் அந்த வணிக வளாகத்தில் இருந்து 81 வயது முதியவர் ஒருவர் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கி சென்றார். அந்த லாட்டரி சீட்டு 1 லட்சத்து 30 ஆயிரம் பவுண்டு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 கோடியே 31 லட்சம்) பரிசை வென்றது.
இதை அறிந்த நரேந்திர கில் பரிசு தொகையை அபகரிக்கும் நோக்கில் அந்த முதியவரிடம் உங்களின் லாட்டரி சீட்டு பரிசை வெல்லவில்லை என பொய் கூறினார். பின்னர் அவர் லாட்டரி நிறுவனத்தை தொடர்பு கொண்டு பரிசு வென்ற லாட்டரி சீட்டு தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார்.
எனினும் அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த லாட்டரி நிறுவனம் லாட்டரி சீட்டை வாங்கியது யார் என்பது குறித்து விசாரித்தது. இதில் நரேந்திர கில் மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர் மீது மோசடி வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணையில் நரேந்திர கில் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதனால் அவரை குற்றவாளியாக அறிவித்த நீதிபதி அவருக்கு 28 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.