பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து வழங்கிய தாய்-மகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து வழங்கியவர்களை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக்கொன்று விட்டு தப்பி ஓடிவிட்டனர். #pakistan #polio
பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து வழங்கிய தாய்-மகள் சுட்டுக்கொலை
Published on

இஸ்லமாபாத்,

பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து முகாமில் மர்ம நபர்கள் வியாழக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மருத்துவர் பணிக் குழுவைச் சேர்ந்த தாயும், மகளும் உயிரிழந்தனர். பாகிஸ்தான் ஊடகங்களில் இது பற்றி வெளியாகியுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத் தலைநகர் குவெட்டாவில், குழந்தைகளுக்கு வியாழக்கிழமை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. ஷால்கோட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் பணியாற்றிக் கொண்டிருந்த மருத்துவப் பணிக் குழுவினரை நோக்கி அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.இதில், அந்தக் குழுவில் பணியாற்றிய பெண்ணும், அதே குழுவைச் சேர்ந்த அவரது மகளும் உயிரிழந்தனர்.தாக்குதல் நிகழ்த்திய நபர்கள் அந்த இடத்திலிருந்து தப்பியோடினர்

போலியோ தடுப்பு இயக்கப் பணியாளர்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.பாகிஸ்தானில், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிப்பதை பயங்கரவாத அமைப்புகள் எதிர்த்து வருகின்றன. போலியோ சொட்டு மருந்து என்ற பெயரில், முஸ்லிம் குழந்தைகளின் இனப் பெருக்க ஆற்றலை அழிப்பதற்கான மருந்துகளை மேற்கத்திய நாடுகள் அளித்து, சதிச் செயலில் ஈடுபட்டுள்ளதாக அந்த அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.குழந்தைகளை முடமாக்கும் போலியோ நோய் இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் முற்றிலும் ஒழிக்கப்பட்ட நிலையில், போலியோ பாதிப்பு அதிகம் காணப்படும் நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தானும் திகழ்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com