பாகிஸ்தானில் சமூக வலைதளங்களுக்கு 6 நாட்கள் தடை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு 6 நாட்களுக்கு சமூக வலைதள சேவைகள் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Social Media
Published on

லாகூர்,

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் அனைத்து சமூக வலைதள சேவையும் 6 நாட்களுக்கு தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 13 முதல் 18-ம் தேதி வரையில் அங்கு இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொஹரம் பண்டிகையை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி மர்யம் நவாஸ் தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான பரிந்துரையை ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, மத்திய அரசிடம் முன்வைத்துள்ளது. வன்முறையை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என மாகாண அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் வெறுப்பு பேச்சு மற்றும் தவறான கருத்து, தகவல் பகிரப்படுவதை தடுக்கலாம் என அந்த அரசு கருதுகிறது.

இதனை நேற்று இரவு பஞ்சாப் மாகாண அரசு தெரிவித்தது. சுமார் 120 மில்லியன் மக்கள் இந்த மாகாணத்தில் வசித்து வருகின்றனர். முதல்-மந்திரி மர்யம் நவாசின் கேபினட் குழு, யூடியூப், எக்ஸ், வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக் உள்ளிட்ட தளங்களை தடை செய்யவுள்ளது.

முன்னதாக அந்த நாட்டு ராணுவ தளபதி அசிம் முனீர், சமூக வலைதளங்களை கடுமையாக விமர்சித்திருந்தார். அது சமூகத்துக்கு தீயது என்றும், டிஜிட்டல் தீவிரவாதத்துக்கு வழிவகை செய்வதாகவும் அவர் சொல்லி இருந்தார். அதேபோல அந்த நாட்டின் துணை பிரதமர் இஷக் தார், சமூக வலைதளங்களுக்கு நாட்டில் நிரந்தர தடை வேண்டுமென தெரிவித்து வருகிறார். அந்த நாட்டில் ஆளும் அரசு மற்றும் ராணுவத்தின் மீது சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com