

வாஷிங்டன்,
உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி அலுவலகமான வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் பசாகி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
உக்ரைனில் அமெரிக்கா உயிரியல் ஆயுத ஆய்வுக்கூடங்களையும், ரசாயன ஆயுதங்களையும் உருவாக்கி வருவதாக ரஷியா கூறியிருப்பது எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. இதை பின்பற்றி சீனாவும் அதே கருத்தை தெரிவித்துள்ளதை கவனித்தோம்.
இவை அபத்தமான குற்றச்சாட்டுகள். பல ஆண்டுகளாக உக்ரைனிலும், இதர நாடுகளிலும் ரஷியா இந்தவகையான தவறான தகவல்களை பரப்பி வருகிறது.
அமெரிக்காவை பொறுத்தவரை, ரசாயன ஆயுதங்கள், உயிரியல் ஆயுதங்கள் தொடர்பான சர்வதேச சட்டங்களை பின்பற்றி வருகிறது. உலகத்தில் எங்குமே ரசாயன, உயிரியல் ஆயுதங்களை நாங்கள் வைத்திருக்கவில்லை.
ஆனால், ரஷியாதான், ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதில் நீண்ட வரலாறு கொண்டது. அதிபர் புதினின் அரசியல் எதிரிகளான அலெக்சி நவால்னி, முன்னாள் உளவாளி செர்ஜி ஸ்கிரிபால் போன்றோருக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்றது.
சொந்த நாட்டு மக்கள் மீதே ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிரியாவின் ஆசாத் ஆட்சியை ரஷியா தொடர்ந்து ஆதரித்து வருகிறது. சர்வதேச சட்டத்தை மீறி, உயிரியல் ஆயுத திட்டத்தை நீண்ட காலமாக நடத்தி வருகிறது.
ஆனால், தான் செய்யும் விதிமீறலை மேலை நாடுகள் செய்வது போல் திசைதிருப்புவது ரஷியாவின் பாணி. உக்ரைனில், தான் மேற்கொண்டுள்ள திட்டமிட்ட, நியாயப்படுத்த முடியாத தாக்குதலை நியாயப்படுத்த ரஷியா இப்படி நடந்து வருகிறது.
உக்ரைன் போரிலும் ரஷியா ரசாயன ஆயுதங்களையோ, உயிரியல் ஆயுதங்களையோ பயன்படுத்த வாய்ப்புள்ளது. அதனால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
உக்ரைனில் அமெரிக்கா உயிரியல் ஆயுத ஆய்வுக்கூடங்களை உருவாக்கி வருவதாக ரஷியா கூறுவது பற்றி தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று ஐ.நா. செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் மறுத்துள்ளார்.