நிலக்கரி பற்றாக்குறையால் தொடர் மின்வெட்டு; இருளில் மூழ்கியது சீனா...!

சீனாவில் நிலக்கரி இறக்குமதியில் ஏற்பட்ட சரிவு காரணமாக அங்கு கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.
நிலக்கரி பற்றாக்குறையால் தொடர் மின்வெட்டு; இருளில் மூழ்கியது சீனா...!
Published on

பீஜிங்,

சீனாவில் நிலக்கரி இறக்குமதியில் ஏற்பட்ட சரிவு காரணமாக அங்கு கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் சீனாவில் உள்ள சுமார் 20 மாகாணங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

நிலக்கரி பற்றாக்குறை மற்றும் கார்பன் உமிழ்வை குறைப்பதற்கான இலக்கை அடையும் நோக்கில் சீனா மின் பகிர்மானத்தை ரேஷன் முறையில் வினியோகிக்க தொடங்கியுள்ளது.

குறிப்பாக பீக் ஹவர்ஸ் எனப்படும் அதிகம் பேர் அதிகமாக மின் சாதனங்களை பயன்படுத்தும் நேரங்களில் மின் வெட்டு அதிகமாக அமல்படுத்தப்படுகிறது. அதன்படி ஒரு நாளைக்கு 8 முறை என்கிற வகையில் தொடர்ச்சியாக 4 நாட்கள் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது. மின்வெட்டால் அன்றாட பணிகளை மேற்கொள்வதில் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

வடகொரியாவில் வாழ்வதை போல் இருப்பதாக புதிய மின்வெட்டுப் பிரச்சினை குறித்து சீன மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனிடையே இந்த மின்வெட்டால் பல்வேறு மாகாணங்களில் சிறு, குறு, கனரக தொழிற்சாலைகள் என அனைத்துமே வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் உற்பத்தி தடைப்பட்டு வெளிநாட்டு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் சீனாவின் மின்வெட்டு சர்வதேச பிரச்சினையாக மாறிவருவதாகவும், இதே நிலை இன்னும் சில நாட்களுக்கு நீடித்தால் சீன பொருளாதாரத்தில் நேரடி தாக்கம் ஏற்படும் என்றும் உலக அளவிலான முதலீட்டு வங்கி மற்றும் பத்திரங்கள் நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com