ஒரே இடத்தில் 14 தேர்கள்... கிருஷ்ணகிரியில் நவராத்திரி நிறைவு விழா கோலாகலம்

14 தேர்களும் கிருஷ்ணகிரி பழையப்பேட்டை காந்திசிலை அருகில் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு வன்னி மரம் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது.
ஒரே இடத்தில் 14 தேர்கள்... கிருஷ்ணகிரியில் நவராத்திரி நிறைவு விழா கோலாகலம்
Published on

நவராத்திரி திருவிழா கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மைகள் வைத்து தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நவராத்திரி விழாவின் நிறைவாக கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்திசிலை அருகில் வன்னி மரம் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது.

இதையொட்டி நேற்று இரவு பழையப்பேட்டை பகுதியில் உள்ள லட்சுமி நாராயண சுவாமி கோவில், சீனிவாச பெருமாள் கோவில், அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், தஞ்சாவூர் மாரியம்மன் கோவில், கவீஸ்வரர் கோவில், சோமேஸ்வரர் கோவில், காட்டிநாயனப்பள்ளி முருகர் கோவில், புதுப்பேட்டை கிருஷ்ணன் கோவில், பட்டாளம்மன் கோவில், படவட்டம்மாள் கோவில், காமாட்சியம்மன் கோவில், ஞான விநாயகர் கோவில், கல்கத்தா காளி கோவில், மேல்தெரு மாரியம்மன் கோவில் என 14 கோவில்களில் இருந்து உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் தேர்களில் எழுந்தருளி பவனி வந்தனர்.

அனைத்து தேர்களும் இன்று காலை 7 மணிக்கு பழையப்பேட்டை காந்திசிலை அருகில் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு வன்னி மரம் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. வன்னி மரத்தின் இலைகளை வீட்டில் வைத்தால் செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம். எனவே, வன்னி இலைகளைப் பெற கூட்டம் அலைமோதியது.

தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர். இதில், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com