முன்னோரை போற்றும் ஆடி அமாவாசை

ஆடி அமாவாசை தினத்தன்னு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதோடு, வீடு, வாசல் இல்லாத ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது சிறந்த பலனைத் தரும்.
முன்னோரை போற்றும் ஆடி அமாவாசை
Published on

அமாவாசை நல்ல நாளா?, கெட்ட நாளா? என்பதிலே பலருக்கும் மாற்றுக் கருத்து உண்டு. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு உகந்த நாளான அமாவாசையில், சுப காரியங்கள் செய்வதோ, ஒரு காரியத்தை தொடங்குவதோ கூடாது என்று சொல்பவர்கள் ஏராளம். இறைவனால் படைக்கப்பட்ட இந்த உலகத்தில் நாம் வாழும் ஒவ்வொரு தினமும் நல்ல தினம்தான். அந்த வகையில் அமாவாசை தினமும் நல்ல நாளே.

சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் ஒன்றையொன்று சந்திக்கும் தினம் அமாவாசை. இறந்து போன நம் முன்னோர்களின் ஆன்மாக்கள், புண்ணிய லோகத்தில் இருந்து இந்த நாளில் பூமிக்கு வருவார்கள். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணித்து, அவர்கள் தொடங்கும் காரியங்களை கனிவோடு பார்ப்பார்கள். அந்த காரியம் வெற்றிபெற ஆசிர்வதிப்பார்கள் என்பது ஐதீகம்.

எனவே பித்ருக்கள் என்று அழைக்கப்படும் முன்னோர்களை வழிபட்டு, அவர்களுக்கு மரியாதை செய்யும் அமாவாசை தினத்தில், புதிய காரியங்களைத் தொடங்கினால், அது நிச்சயம் நல்லவிதமாகவே நடைபெறும் என்பது நம்பிக்கை.

அமாவாசை மாதம்தோறும் வந்தாலும், தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஆடி அமாவாசை சிறப்புக் குரியதாக போற்றப்படுகிறது.

அந்த வகையில் நாளை (24.7.2025) ஆடி அமாவாசை தினம். நாளைய தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதோடு, வீடு, வாசல் இல்லாத ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது சிறந்த பலனைத் தரும். ஆடி அமாவாசை என்று இல்லாமல், ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்ன தானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை போன்ற ஜீவராசிகளுக்கும் உணவு அளிப்பது நல்லது.

அமாவாசை பிதுர் தர்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றை குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவர்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். அதுவும் இயலாதவர்கள் வீட்டில் வைத்து செய்யலாம்.

வீட்டில் செய்ய நினைப்பவர்கள், சூரிய உதயத்துக்கு முன்பாக எழுந்து குளித்து விரதத்திற்கு தயாராகவேண்டும். அன்று அரை நாள் விரதம் இருந்து, புரோகிதரை வைத்து தர்ப்பணம் கொடுக்கலாம். அதுவும் முடியாதவர்கள் எள்ளும், தண்ணீரும் இறைத்து வழிபடலாம். அதன்பிறகு சூரிய பகவானை பார்த்து வணங்க வேண்டும். அன்னதானம் செய்ய முடியாதவர்கள், ஒரு பசு மாட்டிற்கு 9 வாழைப்பழத்தை வழங்கலாம்.

அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் உள்ள கடல் அல்லது நதியில் நீராடலாம். ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அது முடியாதவர்கள், ஆடி அமாவாசையில் தர்ப்பணம் கொடுத்தாலே போதும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com