

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்று. சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில் சிவபெருமாள் கோமதி அம்பாளுக்கு ஸ்ரீ சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார்.
இத்தகைய அரிய நிகழ்ச்சி ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை 5 மணிக்கு சங்கரலிங்க சுவாமி, கோமதி அம்பாளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு கோமதி அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. மதியம் 12 மணிக்கு மேல் தங்க சப்பரத்தில் கோமதி அம்பாள் ஆடித்தபசு மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 4.15 மணிக்கு மேல் சங்கரநாராயணசாமி தபசு காட்சிக்கு புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிலையில் மாலை 6 மணிக்கு மேல் சங்கரநாராயணசாமி ரிஷப வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு தபசு காட்சி கொடுத்தார். ஆடித்தபசு திருவிழாவில் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து இரவு 11 மணிக்கு சங்கரலிங்கசாமி யானை வாகனத்தில் புறப்பட்டு சென்று இரவு 11.30 மணிக்கு மேல் கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.