ஆனந்த வாழ்வு தரும் ஆனி திருமஞ்சன தரிசனம்

நடராஜருக்கு நடைபெறும் ஆனித் திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள் என்பது நம்பிக்கை.
ஆனந்த வாழ்வு தரும் ஆனி திருமஞ்சன தரிசனம்
Published on

மகா அபிஷேகத்தை 'திருமஞ்சனம்' என்பார்கள். இதற்கு 'மங்கள நீராட்டல்' என்று பொருள். நமக்கு ஒரு வருடம் என்பது, தேவர்களுக்கு ஒரு நாள். தேவர்களுக்கு வைகறை பொழுது -மார்கழி, காலைப் பொழுது- மாசி, உச்சிக் காலம் - சித்திரை, மாலைப்பொழுது - ஆனி, இரவுப் பொழுது ஆவணி, அர்த்த ஜாம நேரம் - புரட்டாசி என்று புராணங்கள் சொல்கின்றன. இதில் சந்தியா காலங்களான ஆனியும், மார்கழியுமே நடராஜர் வழிபாட்டிற்கு உகந்த மாதங்களாகப் கருதப்படுகின்றன. சந்தியா காலம் என்பது, சூரியன் உதயமாகும் நேரத்தையும், அது மறையும் நேரத்தையும் குறிப்பதாகும்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன தரிசனமும் சிறப்பாக நடைபெறும். பங்குனி உத்திரத்தைப் போலவே ஆனியில் வரும் உத்திரமும் விசேஷம். இந்த ஆனி உத்திர தினமே, ஆனித் திருமஞ்சன வைபவமாகப் போற்றி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வானுலக தேவர்கள் அனைவரும், நடராஜருக்கு பூஜை செய்வதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.

ஆனி மாத கார்த்திகை நட்சத்திரத்தில் தொடங்கும் ஆனி திருமஞ்சன விழா, 10 நாட்கள் நடைபெறும். முதல் எட்டு நாட்கள் விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ் கந்தர், சிவானந்த நாயகி, சண்டேஸ்வரர் ஆகியோர் வாகனங்களில் வீதி உலா வருவார்கள். ஒன்பதாம் நாள் தேரோட்டம் நடைபெறும். விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமி அம்மை, சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனித் தேர்களில் வலம் வருவார்கள். பின் நடராஜர் - சிவகாமி அம்மையுடன், யானைகள் தாங்கியது போல் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் இரவில் தங்குவார்.

10-ம் நாளான ஆனி உத்திரத்தன்று அதிகாலையில் நடராஜருக்கும், சிவகாமி அம்மைக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். ஆனி உத்திரத்தன்று பகல் 1 மணி அளவில் நடராஜரும், சிவகாமி அம்மையும் நடனம் செய்தபடியே சித்சபையில் எழுந்தருள்வார்கள். நடராஜப் பெருமானுக்கு பிரதோஷ வேளையில் சிறப்பு அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து அலங்காரமும் நடைபெறும். இந்த நிகழ்வின்போது நடராஜருக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், இளநீர் உள்பட 16 வகையான குளிர்ச்சி மிகுந்த பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்விக்கப்படுகிறது.

நடராஜருக்கு காலையில் அபிஷேக ஆராதனை நடைபெற்று முடிந்ததும், இரவு மீண்டும் சித்சபையில் கடாபிஷேகம் நடைபெறும். ஆனித்திருமஞ்சன நிகழ்ச்சியை பதஞ்சலி முனிவர் ஆரம்பித்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியின்போது, சிதம்பரம் ஆலயத்தில் உள்ள மூலவர் நடராஜரே வீதி உலா வருவது சிறப்பு வாய்ந்ததாகும்.

சிவபெருமான் அருள்பாலிக்கும் அனைத்துத் தலங்களிலும் ஆனித் திருமஞ்சனம், முக்கியமான வைபவமாகக் கொண்டாடப்படுகிறது. நடராஜருக்கு நடைபெறும் ஆனித் திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள், தம்பதிகளுக்கு சுகமான வாழ்வு கிடைக்கப்பெறும், கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும், ஆண்களுக்கு மனதில் தைரியமும், உடல் பலமும், செல்வ வளமும் கூடும் என்பது ஐதீகமாக உள்ளது.

வருடத்தில் 6 நாட்கள் சிறப்பு அபிஷேகம்

சிதம்பரத்தில் உள்ள நடராஜப் பெருமானுக்கு, வருடத்தில் 6 நாட்கள் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். சித்திரை மாதம் திருவோண நட்சத்திரம் அன்று மாலை கனகசபையில் அபிஷேகம் நடைபெறும். ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் ராஜ சபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் சூரிய உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம் நடைபெறும். ஆவணி மாதத்தில் பூர்வபட்ச சதுர்த்தசி அன்று மாலையும், புரட்டாசி மாதத்தில் பூர்வபட்ச சதுர்த்தசி அன்று மாலையும் கனக சபையில் அபிஷேகம் நடைபெறும். மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் ராஜ சபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் சூரியஉதயத்திற்கு முன் 4 மணிக்கும், மாசி மாதத்தில் பூர்வபட்ச சதுர்த்தி அன்று மாலை நேரத்தில் கனகசபையிலும் அபிஷேகம் செய்யப்படும். இந்த அபிஷேகங்கள் நடைபெறும்போது நடராஜரை, குடும்பத்தினருடன் தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com