திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை மறுநாள் ஆழ்வார் திருமஞ்சனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை மறுநாள் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை மறுநாள் ஆழ்வார் திருமஞ்சனம்
Published on

திருப்பதி,

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகம சாஸ்திரத்தின்படி ஆண்டுக்கு நான்கு முறை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் (தூய்மைப்பணி) நடப்பது வழக்கம். அதாவது யுகாதி (தெலுங்கு வருட பிறப்பு), ஆனிவார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதசி மற்றும் வருடாந்திர பிரம்மோற்சவம் விழாக்கள் நடைபெறுவதற்கு முந்தைய செவ்வாய்க்கிழமைகளில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.

அதன்படி வருடாந்திர பிரம்மோற்சவம் இந்தாண்டு வரும் 4-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12-ம்தேதி வரை நடக்கிறது. இந்த நாட்களில் காலை, மாலை என இருவேளைகளிலும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறும்.

பிரம்மோற்சவத்தையொட்டி வரும் 1-ம்தேதி (செவ்வாய்க்கிழமை) கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும். காலை 6 மணி முதல் 10 மணி வரை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும். அப்போது கோவில் முழுவதும் தூய்மை செய்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதனால் அன்று 4 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்படும். அதன்பிறகு பக்தர்கள் வழக்கம் போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அன்று விஐபி தரிசனமும் ரத்து செய்யப்படுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com