திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று அனந்த பத்மநாப விரதம் கடைப்பிடிக்கப்பட்டது. அதையொட்டி நேற்று காலை 6 மணியளவில் உற்சவர் சுதர்சன சக்கரத்தாழ்வாரை கோவிலில் இருந்து ஊர்வலமாக பூவராகசாமி கோவில் அருகிலுள்ள ஸ்ரீவாரி புஷ்கரணியின் கரைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அர்ச்சகர்கள் ஆகம முறையில் சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு பூஜைகள் செய்தனர். அதன்பிறகு சுதர்சன சக்கரத்தாழ்வாரை ஸ்ரீவாரி புஷ்கரணியில் மூன்று முறை மூழ்கி எடுத்து தீர்த்தவாரியை நடத்தினர். இதையடுத்து அங்கிருந்து சுதர்சன சக்கரத்தாழ்வாரை கோவிலுக்கு கொண்டு சென்றனர்.
இந்நிழ்வுகளில் திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, விஜிலன்ஸ் அதிகாரி முரளி கிருஷ்ணா, கோவில் துணை செயல் அதிகாரி லோகநாதம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.