

கி.பி. 1464-ம் ஆண்டு செஞ்சிப் பகுதியை ஆட்சி செய்த வேங்கடபதி நாயக்கர் என்ற மன்னன், தன்னுடைய சகோதரி வேங்கடம்மாள் பெயரில் நிர்மாணித்த ஊர், இது. ஆரம்பத்தில் `வேங்கடம்மாள்பேட்டை' என்று அழைக்கப்பட்டு வந்த இந்த ஊர், மருவி தற்போது `வெங்கடாம்பேட்டை' என்று அழைக்கப்படுகிறது.
அலங்காரப் பிரியரான திருமால், தன்னை விதவிதமாக அலங்கரித்தும், துளசியால் அர்ச்சனை செய்தும் வழிபடும் பக்தர்களுக்கு, கேட்ட வரத்தை வழங்கும் வழக்கம் உள்ளவர். அப்படி தன்னை வழிபட்டு தவம் இருந்த சடமர்ஷனர் என்ற முனிவருக்கு, திருமால் காட்சியளித்த இடமே, இந்த வெங்கடாம்பேட்டை என்று சொல்லப்படுகிறது. அதன் பின்னணியில்தான் இங்குள்ள வேணுகோபால சுவாமி கோவில் கட்டப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.
தல வரலாறு
ராமாயண காலத்தில் வனவாசம் சென்ற ராமபிரான், ராவணனின் சூழ்ச்சியால் தன்னுடைய மனைவி சீதாதேவியை பறிகொடுத்தார். மனைவியைத் தேடி தம்பி லட்சுமணனோடு வனம் முழுவதும் அலைந்தார். அப்போது இயற்கை சூழ்ந்த தீர்த்த வனம் என்னும் இந்தப் பகுதி ராமபிரானுக்குப் பிடித்துப் போனது. எனவே அவர் ஒரு நாள் இரவு அங்கேயே தங்கினார். மனைவியின் பிரிவால் பல நாட்கள் தூக்கம் இன்றி தவித்த ராமபிரான், தம்பி லட்சுமணனின் மடி மீது தலை வைத்து சுகமான நித்திரை செய்தார். காலம் கடந்தோடியது. ஒரு கட்டத்தில் சீதாதேவி இலங்கையில் இருப்பதை அறிந்த ராமபிரான், இலங்கைச் சென்று ராவணனுடன் போரிட்டு சீதையை மீட்டு வந்தார். அப்படி திரும்பி வரும் வழியில் மீண்டும் இந்தப் பகுதிக்கு வந்தார். அப்போது சீதா பிராட்டி, அனுமன் ஆகியோருடன் ஆதிசேஷன் மீது துயில் கொண்டு அரங்கனைப் போல சேவை சாதித்து, இந்தப் பூமியின் மகத்துவத்தை உலகறியச் செய்தார்.
பிற்காலத்தில் சில பிரச்சினையின் காரணமாக, சிதம்பரத்தில் இருந்த அரங்கனின் சிலை கடலில் மூழ்கடிக்கப்பட்டது. இதனால் தில்லை திருச்சித்ரக்கூடம் வெறிச்சோடிப் போனது. இதுபற்றி சிலர் பராந்தகச் சோழனிடம் முறையிட்டனர். பராந்தகச் சோழனின் முயற்சியால், தில்லைவாழ் அந்தணர்களின் ஒப்புதலோடு திருச்சித்ரக்கூடத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக, 18 அடி நீளத்தில் அரங்கநாதர் சிலை வடிவமைக்கப்பட்டது. ஆனால் அவ்வளவு பெரிய சிலையை, சிதம்பரத்திற்குள் பிரதிஷ்டை செய்ய சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பராந்தகச் சோழன் முயற்சியால் உருவாக்கப்பட்ட, அந்த 18 அடி நீள சயனகோல சிலை, ராமபிரானுக்கு பிடித்தமான தீர்த்தவனத்தில் (வெங்கடாம்பேட்டை), 'அனந்த சயன ராமர்' என்ற பெயரில் நிறுவப்பட்டது. சிதம்பரம் ஆலயத்தைப் போலவே வெங்கடாம்பேட்டை தலத்தை பிரசித்திப் பெற்றதாக மாற்ற நினைத்த சிலர், சிதம்பரத்தில் ஒரு காலைத் தூக்கி நடனமாடிய நிலையில் இருக்கும் நடராஜருக்கு ஈடாக, வெங்கடாம்பேட்டை திருத்தலத்தில் ஒரு காலை பின்னல் நிலையில் வைத்து புல்லாங்குழல் ஊதும் கோலத்தில் வேணுகோபால சுவாமியை பிரதிஷ்டை செய்தனர். இந்த சிலை சுமார் 6 அடி உயரம் கொண்டது. அவருக்கு இருபக்கத்திலும் பாமா, ருக்மணி தாயாரை நிறுத்தி, அதையே பிரதான மூலவராக மாற்றினர் என்று சொல்லப்படுகிறது.
இந்த ஆலயத்திற்கு இன்னொரு வரலாறும் சொல்லப்படுகிறது. துவாபர யுகம் முடிந்து கலியுகம் தொடங்கிய சூழலில், மக்களிடம் அமைதி குலைந்து, அதர்மம் தலைதூக்கியது. இந்த சமயத்தில், சடமர்ஷனர் என்ற ரிஷி அமைதி வேண்டி, தென்னாட்டிற்கு வந்தார். தென்பெண்ணையாறு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வெப்பம் தாளாமல் அவரது கால்களில் கொப்பளங்கள் தோன்றின. அந்த நேரத்தில் தென்கரை ஓரமாக ஒரு நீரூற்று தோன்றி ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். அதில் தன் காலை நனைத்து வெப்பத்தைத் தணித்துக் கொண்ட முனிவர், அந்த நீரோட்டப் பாதையிலேயே தானும் பயணித்தார்.
அந்த நீரோட்ட பாதை, தில்லைவனம் எனப்படும் சிதம்பரத்தின் வடகோடியில் இருக்கும் தீர்த்தவனம் என்ற வெங்கடாம்பேட்டையில் முடிவடைந்தது. இயற்கை அன்னையின் தாலாட்டு நிறைந்த அந்த இடத்தில் அமைதியாக அமர்ந்து, திருமாலை நினைத்து கடுந்தவத்தில் ஈடுபட்டார். உலகில் மறுபடியும் அறம் தழைக்கவும், தர்ம நெறி நிலைக்கவும் அவர் இந்தத் தவத்தை மேற்கொண்டார். பல காலம் தவத்திலே திளைத்த முனிவரின் பக்தியில் மகிழ்ந்த திருமால், தென்றல் - வாடை ஆகிய காற்றுகளை சக்கரங்களாகவும், நான்கு வேதங்களை குதிரைகளாகவும், பிரம்மதேவரை சாரதியாகவும் கொண்ட தேரில் லட்சுமி தேவியுடன் அமர்ந்த நிலையில் முனிவருக்கு காட்சி கொடுத்தார்.
பின்னர் முனிவர், "இறைவா.. நீங்கள் இந்த உலக நலனுக்காக எடுத்த அவதார வடிவங்களைக் காண வேண்டும்" என்று கேட்க, திருமாலும் தான் எடுத்த 10 அவதாரங்களையும் வரிசையாக, முனிவருக்கு காட்டியருளினார். அதில் ராமாவதாரத்தைக் காட்டியபோது, "இறைவா.. ராமாயணத்தில் பல யுத்தங்களை செய்துள்ளீர்கள். எனவே இங்கு அமைதியாக சயனம் கொள்ளுங்கள்" என்று முனிவர் வேண்டியதாகவும், அதன்படியே இங்கு அனந்த சயன ராமராக இறைவன் திருக்காட்சி கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே போல் கிருஷ்ண அவதாரத்தில் கோவர்த்தனகிரி கோலத்தை காட்டிய திருமாலிடம், "மலை இல்லாமல் புல்லாங்குழல் ஊதும் வேணுகோபாலனாக காட்சி தாருங்கள்" என்று முனிவர் வேண்டியதன்படியே, இத்தல மூலவர் வேணுகோபால சுவாமியாக அருள்வதாகவும் கூறப்படுகிறது. இந்த திருத்தலத்தில் உள்ள மூன்று கோலங்களையும் தரிசிக்கும் அடியவர்களுக்கு அனைத்து செல்வங்களும், முக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆலய அமைப்பு
கருங்கற்களால் கோவில் கட்டப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கில் 236 அடி நீளமும், தெற்கு வடக்கில் 129 அடி அகலமும் கருங்கல் சுவர் அமைந்துள்ளது. கோவில் வாசலின் முன் 7 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் அமைந்துள்ளது. கோவிலின் எதிர்புறத்தில் 50 அடி உயரத்தில் மிகப்பெரிய கருங்கல் ஊஞ்சல் மண்டபம் உள்ளது. அதுமட்டுமின்றி யானை மண்டபம், தேர் மண்டபம், ஒரு ஏக்கர் பரப்பளவில் 7 கிணறுகளுடன் கூடிய தீர்த்தக்குளம் உள்ளது. ஏழு தலைகள் கொண்ட பாம்பின் மீது சயனம் கொண்டிருக்கும் அனந்தசயன ராமர் திருக்கோலம் வேறு எங்கும் காண முடியாது. மோகினி அவதாரத்துடன் கூடிய கிருஷ்ணன் சிலையும் இங்குள்ளது. வேணுகோபாலர் சன்னிதிக்கு தெற்கே செங்கமலவல்லி தாயார் சன்னிதி உள்ளது. பத்மாசன கோலத்தில் இரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியும், மற்ற இரு கரங்களில் அபய முத்திரையுடனும் தாயார் காட்சி தருகிறார். வடக்கே ஆண்டாள் சன்னிதி காணப்படுகிறது. இவ்வாலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா, வைகுண்ட ஏகாதசி, தைத் திருநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அமைவிடம்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. வடலூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயத்தை அடையலாம். வெங்கடாம்பேட்டை வேணுகோபாலசுவாமி கோவிலுக்குச் செல்ல குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, வடலூர் ஆகிய ஊர்களில் இருந்து பஸ் மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன.