அஷ்ட நரசிம்மர் தலங்கள் - சோளிங்கர் - பரிக்கல்

சப்த ரிஷிகளின் வேண்டுகோளின்படி, நரசிம்மர் யோக நிலையில் காட்சியளித்த தலம் இது.
அஷ்ட நரசிம்மர் தலங்கள் - சோளிங்கர் - பரிக்கல்
Published on

மூலவர் -யோக நரசிம்மர், தாயார்- அமிர்தவல்லி. உற்சவர் பக்தவச்சலம் - சுதாவல்லி. இங்குள்ள நரசிம்மரை வழிபட்டுதான், விஸ்வாமித்திரர் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார். நரசிம்மர் வீற்றிருக்கும் பெரிய மலையின் பெயர் கடிகாசலம். இது 1305 படிக்கட்டுகளுடன், 500 அடி உயரம் கொண்டது. யோகநரசிம்மரின் உற்சவ மூர்த்திக்கு, மலையில் இருந்து நான்கு கிலோமீட்டர் தள்ளி ஊருக்குள் தனிக்கோவில் உள்ளது. தமிழ்நாட்டிலேயே மூலவருக்கு தனியாகவும், உற்சவருக்கு தனியாகவும் கோவில் இருப்பது இங்கு மட்டுமே. பெரிய மலைக்கு அருகில் 406 படிக்கற்களைக் கொண்ட சிறிய மலையில் யோக ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில், அரக்கோணம்-சோளிங்கர் சாலையில் இந்த மலைக்கோவில் இருக்கிறது.

பரிக்கல்

இங்குள்ள கோவிலிலும், பிரகலாதனுக்காக காட்சி கொடுத்த நரசிம்ம பெருமானே அருள்பாலிக்கிறார். நரசிம்மரின் மீது அதிக பக்தி கொண்டிருந்த விஜயராஜன் என்ற மன்னனால், இங்கு ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் தன்னுடைய குருவான வாமதேவ மகரிஷி உதவியுடன், மூன்று நாட்கள் தொடர் வேள்வி நடத்த விஜயராஜன் ஏற்பாடு செய்தான். யாகத்தில் கலந்து கொள்ள பல தேசத்து அரசர்களுக்கும் அழைப்புவிடுத்தான். வேள்வி நடைபெறும் சமயத்தில், பரிகாலன் என்னும் அசுரன் அங்கு வந்தான். இதையறிந்த வாமதேவ மகரிஷி, மன்னனை அருகிலுள்ள புதரில் மறைந்திருக்கச் செய்தார். ஆனால் மன்னனை கண்டுபிடித்துவிட்ட அசுரன், கோடரியால் மன்னனை தாக்கினான். இதையடுத்து நரசிம்மர், உக்கிர நரசிம்மராக தோன்றி அசுரனை அழித்து, மன்னனுக்கு காட்சி கொடுத்தார் என்கிறது ஆலய தல வரலாறு.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது, உளுந்தூர்பேட்டை. இங்கிருந்து வடக்கு நோக்கி சென்றால், இந்த ஆலயத்தை அடையலாம். விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள் இருக்கிறது இந்தக் கோவில்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com