சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்டை நிகழ்ச்சி ; திரளான பக்தர்கள் பங்கேற்பு

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழாவையொட்டி நடந்த கலிவேட்டை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்டை நிகழ்ச்சி ; திரளான பக்தர்கள் பங்கேற்பு
Published on

தென்தாமரைகுளம் ,

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழாவையொட்டி நடந்த கலிவேட்டை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கலிவேட்டை நிகழ்ச்சி

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி மாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், 4.30 மணிக்கு கலிவேட்டைக்கு அய்யா புறப்படும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா வீற்றிருக்க தலைமைப்பதியில் நான்கு ரத வீதிகளையும் வாகனம் சுற்றி வந்தது. இரவு 7 மணிக்கு குதிரை வாகனம் முத்திரி கிணற்றங்கரையை சென்றடைந்தது.

திரளானவர்கள் பங்கேற்பு

அங்கு தலைப்பாகை அணிந்து திருநாமம் தரித்து காவி உடை அணிந்த ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் முன்னிலையில் அய்யா கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது. கலி வேட்டையாடும் பணிவிடைகளை குரு பாலஜனாதிபதி நிகழ்த்தினார். கலி வேட்டை நிகழ்ச்சியில் நெல்லை, தூத்துக்குடி,சென்னை மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

குருமார்கள் பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், ஆனந்த் ஆகியோர் வாகன பவனி பணிவிடைகளையும், பள்ளியறை பணிவிடைகளை குருமார்கள் ஜனாயுகேந்த், ஜனாவைகுந்த், நேம்ரிஷ் ஆகியோரும் செய்திருந்தனர். பின்னர் பக்தர்களுக்கு திருப்பதம் வழங்கி சுற்றுப்பகுதி ஊர்களான செட்டிவிளை, சாஸ்தான் கோவில் விளை, கோட்டையடி புதூர், சோட்டப்பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் வழியாக வாகனம் பவனி வந்தது. அப்போது கிராம மக்கள் அய்யாவுக்கு சுருள் வைத்து வழிபட்டனர்.

தேரோட்டம்

பல கிராமங்களை சுற்றி வந்த வாகனம் நள்ளிரவு 12 மணிக்கு தலைமைப்பதியின் வடக்கு வாசலுக்கு வந்தது. அங்கு அய்யா வைகுண்டசாமி பக்தர்களுக்கு தவக்கோலத்தில் காட்சியளித்தார். பின்னர் பணிவிடையும், பெரிய யுகப்படிப்பும், வடக்கு வாசலில் அன்னதர்மமும் நடந்தது.

நாளைமறுநாள் (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டம் அன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com