இறைவனை மறக்காதவர்கள் பாக்கியவான்களே...

அரூப உலகில் இறைவனிடமிருந்து தொடங்கிய மனிதன் மீண்டும் தன்னைப் படைத்த இறைவனை நோக்கிப் பயணிப்பதே உலக வாழ்வாகும். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நம்முடைய திரும்புதலும் (மீட்சியும்) அல்லாஹ்வின் பக்கமே இருக்கிறது”. (திருக்குர்ஆன் 2:156)
இறைவனை மறக்காதவர்கள் பாக்கியவான்களே...
Published on

கருவில் அமைவதற்கு முன் மனிதன் இன்னப்பொருள் என்று கூற முடியாத ஒரு அம்சமாகவே இருந்தான். வானுலகில் இறைவனிடம் அடைக்கலப் பொருளாக இருந்த மனிதன் இறையருளால் அரூப உலகில் நின்றும் சொரூப உலகிற்கு வருவதற்காக இறை நாட்டப்படி பல்வேறு நிலைகளை கடந்து இறுதியில் தாயின் கருவறையில் வந்து குடிபுகுந்தான். கருவறையில் அவனுக்கு வேண்டியதை வேண்டியபடி இறைவன் கொடுத்து வந்தான். இறைவனைத் தவிர அவனுக்கு அங்கு வேறு எந்த உறவுகளும் கிடையாது.

உரிய காலம் கனிந்தவுடன் மனிதன் உலகில் வந்து பிறக்கின்றான். அப்படி பிறக்கும் மனிதன் சிசுவில் மிக பலகீனமானவனாகவே காணப்பட்டான். கண் உண்டு, ஆனால் பார்வையின் அர்த்தம் அவனுக்கு புரியாது. வாய் உண்டு, ஆனால் அவனால் பேச முடியாது. காது உண்டு, ஆனால் அவனுக்கு கேள்வியின் ஞானம் கிடையாது. அழுகை ஒன்றே அவனது தேவைகளை பூர்த்தி செய்கின்ற ஒரே ஆயுதமாக இருந்தது.

அல்லாஹ் என்ற ஏகப் பரம்பொருள் அன்னையின் மனதில் அளப்பரிய அன்பினை ஏற்படுத்தி மனிதனை அரவணைத்து காத்து வளர்த்தான். உலகில் வந்ததும் அவனுக்கு தாய், தந்தை, சகோதரர்கள் போன்ற உறவுகள் ஏற்படுகிறது. இந்த உறவுகள் வளர வளர தனது பூர்வீகமான இறைவனை மனிதன் மெல்ல மெல்ல மறக்கத் தொடங்குகிறான். அவனது ஐம்புலன்களின் ஆற்றலும் வலுவடைந்ததும் ஒரு புது உலகத்தையே அவன் காண்கின்றான்.

அவ்வாறு கண்ட அந்த உலகம் தன்னுடன் எப்போதும் நிலையாக இருக்கப்போவதாக எண்ணி அதன் மாய வலையில் சிக்குகின்றான். அதனால் நீண்ட நெடிய மறுஉலக வாழ்க்கையை மறந்தவனாக வாழ்கின்றான்.

இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு இயம்புகிறது: "இங்கு உங்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பதெல்லாம் நிலையற்ற இவ்வுலக வாழ்வின் அற்ப இன்பங்களே. நம்பிக்கை கொண்டு இறைவனை நம்பி இருப்பவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் இருப்பதோ மிக மேலானதும் நிலையானதுமாகும்". (திருக்குர்ஆன் 42:36).

மதிகெட்ட மனிதன் திருந்துவதற்காக, இறைவன் வேதங்களை தந்து தனது உறவை அவனுக்கு நினைவூட்டிக் காட்டினான். ஆனால் உலகம் மனிதனை மிக இறுக்கமாக பிடித்து ஏமாற்றவே முயல்கிறது. ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் தன்னைப் படைத்த இறைவனை என்றும் மறக்காமல் இந்த உலகில் வாழ்பவர்கள் பாக்கியவான்களே.

மு. முகம்மது சலாகுதீன், நெல்லை ஏர்வாடி.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com