பிரம்மோற்சவ விழா 6-வது நாள்: தங்கத்தேரில் மலையப்ப சுவாமி... கஜ வாகனத்தில் வீதிஉலா

பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான இன்று மலையப்பசுவாமி கஜவாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பிரம்மோற்சவ விழா 6-வது நாள்: தங்கத்தேரில் மலையப்ப சுவாமி... கஜ வாகனத்தில் வீதிஉலா
Published on

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. இந்த பிரம்மோற்சவ விழாவின்போது தினமும் காலை, இரவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இதன்படி ஸ்ரீவாரி பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான இன்று(புதன்கிழமை) மாலை 4 மணிக்கு தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தசபக்தர்களின் நடனம், பஜனை வாத்தியங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க, திரு மாடவீதிகளில் ஸ்வர்ணரத உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பெண்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீவாரி தங்க தேரை வடம்பிடித்து இழுத்தனர். 

தங்கத் தேரை தரிசிப்பதன் மூலம் - லட்சுமி தேவி கருணையுடன் செல்வத்தையும் இன்பங்களையும் தருகிறாள்; பூதேவி கருணையும், சம்சதாதன்யங்களும், ஸ்ரீவாரிகருணையும் கொண்டு சகல சௌபாக்கியங்களையும் மகிழ்ச்சியையும் தருவதாக பக்தர்களின் நம்பிக்கை.

தொடர்ந்து இரவு 7 மணிக்கு மலையப்பசுவாமி கஜவாகனத்தில் காட்சியளித்தார். மாட வீதிகளில் நடைபெற்ற வாகன சேவையில் பல்வேறு கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தன. வாகன சேவையில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

செல்வத்தின் அடையாளமான யானையை கண்விழித்தவுடன் பார்ப்பது இன்பத்தை வளர்க்கும். யானை, ஓம்காரம் மற்றும் பிரபஞ்சத்தின் சின்னமாக விளங்குகிறது. இந்த வாகன சேவையில் மலையப்பசாமியை தரிசனம் செய்வதால் யானை அளவுள்ள பிரச்சினைகளும் எறும்பு போல் மாறி தீர்ந்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அகந்தையை விட்டொழித்தால் இறைவனே நம்மைக் காப்பான் என்பதை இந்த உற்சவம் நினைவூட்டுகிறது.

பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com