சிங்கவரம் அரங்கநாதர் கோவிலில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது

செஞ்சியை ஆண்ட ராஜாதேசிங்கிடம் அரங்கநாதர் நேரில் பேசியதாக தல வரலாறு கூறுகிறது.
சிங்கவரம் அரங்கநாதர் கோவிலில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது
Published on

செஞ்சி,

செஞ்சியை அடுத்த சிங்கவரம் கிராமத்தில் மலை மீது அரங்கநாதர் கோவில் உள்ளது. ஸ்ரீரங்கம் அரங்கநாதரை போல், சிங்கவரம் அரங்கநாதரும் சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இது பல்லவர் கால குடவரை கோவிலாகும். செஞ்சியை ஆண்ட ராஜாதேசிங்கிடம் அரங்கநாதர் நேரில் பேசியதாக தல வரலாறு கூறுகிறது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், உபயதாரர்கள், கிராமபிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து தினமும் காலையில் கேடய புறப்பாடும், மாலையில் வெவ்வேறு வாகனங்களில் சாமி வீதியுலாவும் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 30-ந் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com