

கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இந்த அழகான ஆலயம். இந்தக் கோவிலின் முகப்பை கடந்தவுடன் கருடாழ்வார் தனி சன்னிதியில் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். அடுத்துள்ள மகாமண்டப நுழைவு வாசலின் இடதுபுறம் விநாயகர், வலதுபுறம் கிருஷ்ணன் திருமேனிகள் உள்ளன.
மகா மண்டபத்தின் உள்ளே வலதுபுறம் நிகமாந்த மகாதேசிகர், உடையவர், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் திருமேனிகள் தனி மண்டபத்தில் உள்ளன. இடதுபுறம் சுதர்சன பெருமாள் மற்றும் சக்கரத்தாழ்வார் தனி சன்னிதிகளில் ஒரு சேர அருள்பாலிக்கின்றனர். அர்த்த மண்டபத்தின் நுழைவு வாசலில் இடதுபுறம் மணிகள் மற்றும் வலதுபுறம் பிரபந்தன் என்ற இரு துவாரபாலகர்கள் கம்பீரமாக காவல் நிற்கின்றனர்.
பொதுவாக ஆலயங்களில் துவாரபாலகர்களின் திருமேனிகள் சுதையில் செய்யப்பட்டவையாக இருக்கும். ஆனால் இங்கு இந்த இரண்டு துவாரபாலகர்கள் திருமேனிகள் கருங்கற்களில் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இருவருக்கும் பிற பரிவார தெய்வங்களுக்கு நடைபெறுவது போல் தினசரி பூஜைகள் உண்டு. இது இந்த ஆலயத்தின் தனி சிறப்பு.
அடுத்துள்ள கருவறையில் பெருமாள் ஸ்ரீனிவாசன் என்ற திருநாமம் தாங்கி, நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். பெருமாளுக்கு இங்கு நான்கு கரங்கள். வலது மேல் கரத்தில் சுதர்சன சக்கரமும் இடது மேல் கரத்தில் வாஞ்ச ஜன்ய சங்கும், வலது கீழ் கரத்தில் வரத முத்திரையுடன் சேவை சாதிக்கும் பெருமாளின் இடது கரம் பூமியை நோக்கி தாழ்ந்துள்ளது. பெருமாளின் இருபுறமும் ஸ்ரீதேவி மற்றும் பூமாதேவி காட்சி தருகின்றனர்.
காளியம்மன்
பெருமாளின் பெயரான ஸ்ரீனிவாசன் என்ற பெயரிலேயே இந்த தலம் அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் இத்தலம் தற்போது காளி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அதற்கு காரணமும் உண்டு. இந்த ஊரில் மந்தகரை காளியம்மன் என்ற காளியை ஊர் மக்கள் சிலர் ஓர் நதியில் கண்டெடுத்தனர். அந்த காளியை ஓர் இடத்தில் பிரதிஷ்டை செய்து வைத்தனர். ஊருக்கு புதிதாக வந்த அம்மன்தானே என எண்ணிய ஊர்மக்கள் அந்த காளியை வழிபடாமல், ஊரின் வடபால் இருந்த மாரியம்மனை மட்டும் வழிபட்டு வந்தனர்.
பொறுத்துப் பார்த்தாள் காளி. காளியின் மனம் உக்கிரமடைந்ததால் ஊர் மக்களில் பலருக்கு நோய் வந்தது. பயந்துபோன மக்கள் ஸ்ரீனிவாசப் பெருமாளை சேவித்து காரணம் கேட்டனர். பெருமாள் தனது தங்கையான காளியம்மனை சாந்தமாகும்படி கூற அவள் உக்கிரம் தணிந்தது. இனி இந்த ஊர் உன் பெயரால் அழைக்கப்படும் என பெருமாள் அவளுக்கு வரம் அளித்தார். அதுமுதல் ஸ்ரீனிவாசபுரம் எனும் இந்த ஊர், காளி என அழைக்கப்படலாயிற்று.