நாராயணகிரி மலையில் ஏழுமலையான் பாதங்களில் சத்திர ஸ்தாபனோற்சவம்

ஏழுமலையான் பாதங்களில் திருமஞ்சனம், அலங்காரம், பூஜை செய்து, குடையை பிரதிஷ்டை செய்து, நைவேத்தியம் சமர்ப்பித்தனர்.
நாராயணகிரி மலையில் ஏழுமலையான் பாதங்களில் சத்திர ஸ்தாபனோற்சவம்
Published on

திருமலையில் உள்ள ஏழு மலைகளில் மிகவும் உயரமானது நாராயணகிரிமலை. லட்சுமி தாயாரை தேடி வைகுண்டத்தில் இருந்து வேங்கடேஸ்வரசாமி பூலோகம் வந்தபோது, முதன் முதலில் தனது திருப்பாதங்களை பதித்த இடம் நாராயணகிரிமலை என  புராணங்களில் கூறப்படுகிறது. இதை, நினைவுக்கூர்ந்து ஆடி மாத துவாதசி நாளில் சத்திர ஸ்தாபனோற்சவம் நடக்கும். இந்த உற்சவத்துக்கு இன்னொரு நம்பிக்கையும் உள்ளது. ஆடி மாதத்தில் பலத்த காற்று வீசும். நாராயணகிரி மலை சிகரம் உயரமான பகுதி என்பதால் இங்குப் பலத்த காற்று வீசும். அந்தக் காற்றால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பொதுமக்கள், பக்தர்கள், வனவிலங்குகளை பாதுகாப்பதற்காக வாயுதேவரை வேண்டி ஏழுமலையான் பாதத்தில் குடையை பிரதிஷ்டை செய்வது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் திருமலையில் நாராயணகிரி மலையில் உள்ள ஏழுமலையானின் பாதங்களில் சத்திர ஸ்தாபனோற்சவம் நடந்தது. முன்னதாக, ஏழுமலையான் கோவிலில் மதியம் 2-வது மணி ஒலித்ததும் பூஜை பொருட்கள், புஷ்பங்கள் மற்றும் குடை போன்ற மங்களப் பொருட்களை அர்ச்சகர்கள் தலையில் சுமந்தபடி மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவிலின் நான்கு மாடவீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து மேதர மிட்டாவை அடைந்தனர். அங்கிருந்து நாராயணகிரி மலைக்கு சென்றனர்.

அங்குள்ள ஏழுமலையான் பாதங்களில் திருமஞ்சனம், அலங்காரம், பூஜை செய்து, ஏழுமலையானின் பாதங்களில் குடையை பிரதிஷ்டை செய்து, நைவேத்தியம் சமர்ப்பித்தனர். வேதப் பாராயணதாரர்கள் பிரபந்த சாத்துமுறை நிகழ்த்தினர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நாராயணகிரி மலையில் இருந்து அதிகாரிகள், அர்ச்சகர்கள் கோவிலுக்கு புறப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com