சதுர்த்தி விழா.. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்

சதுர்த்தி விழாவையொட்டி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் இன்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.
சதுர்த்தி விழா.. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்
Published on

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு விழா கடந்த 18-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவையொட்டி தினமும் இரவு சுவாமி மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) மாலை கஜமுகசூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மேல் வெள்ளி யானை வாகனத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு கோவிலை சுற்றி அசுரனை வதம் செய்ய வீதி உலா வருகிறார். பின்னர் இரவு 7 மணி அளவில் கோவில் தெப்பக்குளம் முன்பு சூரனை யானை தந்தத்தால் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தொடர்ந்து 8-வது நாளாக வருகிற 25-ந்தேதி வெள்ளி குதிரை வாகனத்திலும் சுவாமி எழுந்தருளுகிறார். 9-வது நாள் திருவிழாவான 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை தேரோட்டம் நடக்கிறது. முன்னதாக காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளுகிறார்.

அதன் பின்னர் ஆண்டிற்கு ஒருமுறை சந்தனகாப்பு அலங்காரத்தில் மூலவர் கற்பகவிநாயகர் காட்சியளிக்கும் வகையில் அன்று மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் கற்பகவிநாயகர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். பின்னர் மாலை தேரோட்டம் நடக்கிறது.

இரவு சுவாமி யானை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வருகிறார். 10-ம் திருநாளான 27-ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பகவிநாயகர் எழுந்தருளி கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து உச்சிகால சிறப்பு பூஜைகள் மற்றும் மூலவர் கற்பகவிநாயகருக்கு முக்குறுணி கொழுக்கட்டை, படையல் படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகளின் புறப்பாடு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி பழனியப்பச்செட்டியார் மற்றும் நச்சாந்துபட்டி குமரப்பச் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com