சித்திரை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள்

அக்னி தீர்த்த கடலில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
சித்திரை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள்
Published on

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமி கோவில் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக விளங்கி வருகிறது. ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் மஹாளய அமாவாசை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தந்து அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். அவ்வகையில், இன்று சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்த கடலில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

இதற்காக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நள்ளிரவு முதல் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகளில் பக்தர்கள் வரத் தொடங்கினர். அதிகாலையில் அவர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர். தொடர்ந்து கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் மணற்பரப்பில் அமர்ந்து முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

தை அமாவாசையை முன்னிட்டு ராமநாதசுவாமி கோவில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 5 மணி முதல் 5.30 வரை ஸ்படிகலிங்க பூஜையும், அதனை தொடர்ந்து சாயரட்சை பூஜை வரையிலான காலபூஜைகள் நடைபெற்றது.

இதே போல் ராமநாதபுரம் அருகே சேதுக்கரை கடல் மற்றும் தேவிபட்டினம் நவபாஷாண கடலிலும் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com