வேண்டிய வரம் அருளும் கோவை கோனியம்மன்

கோயம்புத்தூர் நகரின் மையத்தில் அமைந்துள்ளது, கோனியம்மன் திருக்கோவில். இந்த கோனியம்மன், துர்க்கா பரமேஸ்வரியின் வடிவம் ஆவார். ‘கோன்’ என்றால் ‘அரசன் அல்லது தலைவன்’ என்று பொருள். இதுவே பெண்ணைக் குறிக்கும் போது ‘கோனி’ என்றாகிறது.
வேண்டிய வரம் அருளும் கோவை கோனியம்மன்
Published on

அனைவருக்கும் அரசி, தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம், அனைவருக்கும் தலைவி என்கிற பொருளில், இந்த அன்னையை 'கோனியம்மன்' என்று அழைக்கிறார்கள்.

கோனியம்மன் ஆலயத்தை மையமாகக் கொண்டே, கோயம்புத்தூர் நகரம் அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். இந்த ஆலய வரலாறு 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கிறது. இருளர் இன மக்களால் 600 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆலயம் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. பழங்குடியினரின் ஆட்சிக்காலத்திற்குப் பின்னர் முக்கியத்துவத்தை இழந்த இக்கோவிலை மைசூர் மன்னர் வழிவந்த ஒருவர், `மகிசாசுர மர்த்தினி' அமைப்பில் சீரமைத்தார்.

தொழில் நகரமான கோயம்புத்தூரில் ரெயில் நிலையத்திற்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது கோனியம்மன் ஆலயம். இதன் பிரதான ராஜகோபுரம் விண்ணைத் தொடும் வகையில் உயர்ந்து நிற்கிறது. 7 நிலைகளைக் கொண்ட இந்த ராஜ கோபுரத்தைக் கடந்து சென்றதும், மூன்று நிலை கோபுரம் ஒன்று, கோனியம்மன் பெயர் பலகை தாங்கி நிற்கிறது. இவ்வாலயத்தில் தல விருட்சமாக மகிழ மரம், அரச மரம், நாகலிங்கப் பூ மரம் ஆகிய மூன்று மரங்கள் உள்ளன. இவற்றில் அரச மரத்தில் குழந்தை பாக்கியம் வேண்டி, பெண்கள் பலரும் தொட்டில் கட்டி வழிபடுகிறார்கள். வேண்டிய வரங்கள் பலவற்றைத் தரும் இந்த ஆலயம், குழந்தை வரம் அருளும் தலங்களில் முக்கியமானதாக இருக்கிறது.

தல வரலாறு

கொங்கு நாடான கோயம்புத்தூ, முன் காலத்தில் அடர் மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. இருளர்களின் தலைவனான கோவன் என்பவா, அதனை சீர்படுத்தி நகரமாக மாற்றி ஆட்சி புரிந்தார். ஒரு சமயம் அவரது ஆட்சியில் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் அனைவரும் வாழ வழியின்றி தவித்தனா. அவர்களின் நிலையைக் கண்டு கலங்கிய கோவன், தனது மக்கள், வாழ்வில் அனைத்து நன்மைகளும் பெற்று, பஞ்சம், பிணி இல்லாமல் வாழ்ந்திட வேண்டும் என்பதற்காக, வனப்பகுதியில் சிறிய நிலத்தை சீரமைத்து, அங்கு கல் ஒன்றை வைத்து அம்மனாக எண்ணி வழிபட்டு வந்தார். இந்த வழிபாட்டிற்குப் பிறகு, அந்தப் பகுதி மக்கள் அனைவரும் செழிப்புற்று வாழத் தொடங்கினர். அதன்பின் இருளர்கள் அந்த அம்மனையே தங்களின் குலதெய்வமாக எண்ணி கோவில் கட்டி வழிபடத் தொடங்கினர்.

இந்தக் கோவில் கோயம்புத்தூருக்கு வடக்கு திசையில் அமைந்தது. அம்பிகை காவல் தெய்வமாக நகரைக் காத்து வந்தாள். கோவன் ஆட்சிக்குப் பின் பல்லாண்டுகள் கழித்து இப்பகுதியை ஆட்சி செய்தவர் இளங்கோசர் என்ற மன்னன். அப்போது சேர மன்னன் ஒருவன் படையெடுத்து வந்தான். அவனிடம் இருந்து நாட்டைக் காக்க நகரின் மையத்தில் ஒரு கோட்டையையும், மண்மேட்டையும் கட்டி, தங்களின் காப்பு தெய்வமான அம்மனை அங்கு வைத்து வழிபட்டார், இளங்கோசர். அந்த அம்மனே கோனியம்மன் ஆவார்.

முதன்முதலாகச் சிறிய கோவில் கட்டப்பட்டு அங்கே தெய்வத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். சில காலம் கடந்த பின்பு கோவிலைப் புனரமைத்து பெரிதாகக் கட்டி அதிலே புதிய மூலவரின் சிலையை பிரதிஷ்டை செய்தனர். இருந்தாலும் முதன்முதலாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆதி விக்ரகத்திற்கும் தனி சன்னிதி அமைந்துள்ளது. இவருக்கு `ஆதி கோனியம்மன்' என்று பெயர். குடும்ப சிக்கல்கள் தீர இங்கே வழிப்பட்டால் அனைத்தும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகமாகும்.

இவ்வாலயத்தில் அருளும் கோனியம்மன் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். வலது காலை மடித்து பீடத்தின் மீது வைத்தபடியும், இடது காலை தொங்க விட்டபடியும் அன்னை அமர்ந்திருக்கிறார். அவரது இடது காலின் அடியில் அரக்கன் சுருண்டு கிடக்கிறான். கழுத்தில் ஆரம் அணிந்த அம்பிகையின் முகம், சற்றே உக்கிரமாக உள்ளது. எட்டு கரங்களுடன் அருளும் இந்த அம்மன், சூலம், உடுக்கை, வாள், சங்கம், கபாலம், அக்னி, சக்கரம், மணி ஆகியவற்றை ஏந்தி காட்சியளிக்கிறாள்.

சிவனைப் போல, இடது காதில் தோடும், வலது காதில் குண்டலமும் அணிந்திருப்பது அபூர்வமான அமைப்பு. சிவமும், சக்தியும் வேறில்லை என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது. கோனியம்மன், வீர சக்தியானவள் என்பதை விளக்கும் வகையில் அன்னையின் தோற்றம் இருக்கிறது. சிவசக்தி வடிவமாகவும், அர்த்தநாரீஸ்வரராகவும் இத்தல அம்மன் கோலம் கொண்டிருப்பது விசேஷமான ஒன்றாகும்.

திருமணம் நடத்தி வைத்தல், தடைகளை நீக்குதல், பிள்ளைப்பேறு நல்குதல், பணியிடம் வாய்க்கச் செய்தல், செல்வமும் செழிப்பும் தருதல், வளமும் நலமும் வாரி வழங்கல் என்று அனைத்து வகையான பிரார்த்தனைகளையும் நிறைவேற்றித் தருபவளாகவே அன்னை அருள்பாலிக்கிறாள். அம்பிகை சன்னிதி எதிரே சிம்ம வாகனம் உள்ளது. முன்மண்டபத்தில் சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகியோர் உள்ளனர். இங்கு ஆடி மாதம் முழுவதும் ஊஞ்சல் உற்சவம் நடக்கும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் விசேஷ பூஜை உண்டு. அம்மனுக்கு வலப்புறத்தில் தம்பதி சமேதராக நவக்கிரகங்கள், பின் பகுதியில் ஆதி கோனியம்மன், பஞ்சமுக விநாயகர், வள்ளி -தெய்வானை உடனாய சுப்பிரமணியர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

இங்கு வேண்டிக் கொள்ள திருமணத்தடை நீங்கும், குழந்தைப்பேறு கிட்டும், நோய்கள் நீங்கும், தொழில் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை. இப்பகுதி மக்கள், கோனியம்மனை வேண்டி தங்கள் வீட்டுப்பிள்ளைக்கு வரன் கிடைக்கப்பெற்றவர்கள் கோவிலிலேயே நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். மணமக்கள் வீட்டார் இருவரும் ஒரு கூடையில் உப்பை நிறைத்து, அதன் மேலே மஞ்சள், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பூ வைக்கின்றனர். கோனியம்மன் சாட்சியாக திருமணத்தை உறுதி செய்கின்றனர். தங்கள் வீட்டுப் பெண்ணான கோனியம்மா, தம்முடைய குழந்தைகளின் திருமணத்தைக் கோலாகலமாகவே நடத்தி வைப்பாள் என்று பரவசப்படுகிறார்கள். நோய் நீங்கவும், மாங்கல்ய பாக்கியத்திற்கும் வேண்டிக்கொள்கின்றனர்.

இவ்வாலயத்தில் நடைபெறும் மாசி மாதத் திருவிழாவின் போது, சிவன்- அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அப்போது கோவில் எதிரே யாக குண்டம் வளர்த்து, அக்னியை சிவனாக பாவித்து பூஜை செய்வார்கள். பூஜையில் பயன்படுத்தப்பட்ட தீர்த்த கலசத்தின் மேல் வைத்த மாங்கல்யத்தை அம்பிகைக்கு அணிவிப்பார்கள். அக்னி வடிவமாக இருக்கும் சிவன், அம்பாளை திருமணம் செய்து கொள்வதாக ஐதீகம். இதற்கு அடுத்த நாள் தேர்த்திருவிழா நடைபெறும்.

இது தவிர தமிழ்மாதப்பிறப்பு, பவுர்ணமி, ஆடி வெள்ளி, தை வெள்ளி, நவராத்திரி, திருக்கார்த்திகை, தனுர்மாத பூஜை, தைப்பொங்கல், தீபாவளி நாட்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. திருவிளக்கு வழிபாடும் நடைபெறுகிறது. கோனியம்மனுக்கு மாசி மாதம் தீக்குண்டம் இட்டுவிட்டால் யாரும் ஊரை விட்டு வெளியில் போகமாட்டார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com