தட்சிணாமூர்த்தியை தரிசிப்போம்..

‘தட்சிணம்’ என்ற சொல்லுக்கு ‘தெற்கு’ என்றும், ‘ஞானம்’ என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக தென்திசை நோக்கி அமர்ந்து, தன்னை வழிபடுபவர்களுக்கு ஞானத்தை வழங்கி அருள்பவர்தான் ‘தட்சிணாமூர்த்தி.’
தட்சிணாமூர்த்தியை தரிசிப்போம்..
Published on

அந்த வகையில் ஞானமானது, தட்சிணாமூர்த்தி யின் முன்பாக அவரையே நோக்கியபடி நின்று கொண்டிருக்கிறது. இவர் சிவபெருமானின் ஒரு அம்சமாகவே பார்க்கப் படுகிறார். தட்சிணாமூர்த்திக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவை கலந்து, விளக்கேற்றி வழிபட வேண்டும். 11 அல்லது 21 என்ற முறையில் விளக்குகள் ஏற்றலாம். தட்சிணாமூர்த்தியை வலம் வரும்போது 3, 9, 11 ஆகிய முறைகளில் சுற்றிவர வேண்டும். அவருக்கு பிடித்த முல்லை மலர் மாலை அணிவித்து, கொண்டைக்கடலை, வெற்றிலை, பாக்கு, பழத்துடன் வழிபட வேண்டும்.

தட்சிணாமூர்த்தியின் வலது கை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டை விரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகிய மூன்றும் தனித்து நிற்கும். இந்த அடையாள சின்னத்தை 'சின்முத்திரை' என்பார்கள். இதில் கட்டை விரல் கடவுளைக் குறிக்கும். சுட்டு விரல் மனிதனைக் குறிக்கும். நடு விரல் ஆசையையும், மோதிர விரல் கர்மம் ஆகிய செயல்களையும், சுண்டு விரல் மாயையையும் குறிக்கும். மனிதனை மாயை மறைத்து நின்று, ஆசையை ஏற்படுத்தி, கெட்ட கர்மங்களை செய்ய வைக்கிறது. அந்த மூன்றையும் மறந்துவிட்டு இறைவனை வணங்கினால், இறைவனோடு ஐக்கியமாகலாம் என்பதே இதன் பொருளாகும்.

யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யானம் என்ற நான்கு நிலைகளில் தட்சிணாமூர்த்தி வழிபடப்படுகிறார். பெரும்பாலான கோவில்களில் காட்சி தருபவர், வியாக்யான தட்சிணாமூர்த்தியே. வேதாகமங்களின் நுட்பமான உண்மைகளை இவரே விளக்கி அருள்கிறார். வேதத்தின் பொருள் புரியாத சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நான்கு முனிவர்களுக்கு வேதத்தின் பொருளை விளக்கிக் கூறினார். எனவேதான் இந்த நான்கு முனிவர்களும் அவர் பாதத்தின் அடியில் வீற்றிருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com