தசரா திருவிழா 7-ம் நாள்: பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா

இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வீடு பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
தசரா திருவிழா 7-ம் நாள்: பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா
Published on

குலசேகரன்பட்டினம்,

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை ஒட்டி தினமும் முத்தாரம்மன் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர். இந்த பக்தர்கள் குழுக்கள் அமைத்து அந்தந்த ஊர்களில் குடில் அமைத்து தங்கி, பல்வேறு வேடமணிந்து காணிக்கை வசூலித்து வருகின்றனர். மேலும், வேடமணிந்த நூற்றுக்கணக்கான தசரா குழுவினர் கோவிலுக்கு வந்து காப்புகட்டி, கடற்கரையில் தீர்த்தம் எடுத்து சென்றனர்.

6-ம் திருநாளான நேற்று முன்தினம் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவில் வளாகத்தில் மேளதாளம் முழங்க வீதிஉலா வந்த முத்தாரம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இக்கோலத்தில் முத்தாரம்மனை தரிசித்தால் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.

7-ம் திருவிழாவான நேற்று காலை முதல் இரவு வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் கலையரங்கத்தில் சமய சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி நடைபெற்றது. மாலை 4 மணிக்கு மகிஷாசுரன் குலசேகரன்பட்டினம் ஊர் முக்கிய வீதிகளில் உலா வருதல் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு முத்தாரம்மன் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வீடு பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com