வாழ்வை வளமாக்கும் துரியோதனன் ஆலயம்

மகாபாரதத்தில் வரும் துரியோதனன் கர்ணனுடன் கொண்டிருந்த நட்பின் மூலம் சிறப்புக்குரியவன் என்று பாராட்டப்பட்டாலும், அவனைத் தீயவழியில்செல்பவன், கொடூரமானவன் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
வாழ்வை வளமாக்கும் துரியோதனன் ஆலயம்
Published on

துரியோதனன், 'இந்த பானம் புளித்துப் போயிருந்தாலும், அதைக் குடித்த எனக்கு புதுவிதமான மகிழ்ச்சி கிடைத்தது போலிருக்கிறது. உங்களுக்கு வேண்டியதை என்னிடம் கேளுங்கள்' என்றான்.

அந்தப் பெண்ணோ 'இங்கு இறைவன் வழிபாட்டுக்குத் தனியாக ஒரு கோவில் கட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும்' என்று வேண்டினாள்.

அதற்குச் சம்மதித்த துரியோதனன், அந்தப்பகுதி தலைவரிடம், அவர்கள் விரும்பும் கோவில் ஒன்றைக் கட்டிக் கொள்ள அனுமதியளித்ததுடன், அந்தக் கோவில் கட்டுமானத்துக்கும், பயன்பாட்டுக்கும் தேவையான நிலங்களையும் எடுத்துக் கொள்ளவும் அனுமதி அளித்துவிட்டு அங்கிருந்து சென்றான்.  

இதையடுத்து அந்தப் பகுதி மக்கள் வழிபாட்டிற்கு ஏற்றதாக ஒரு புதிய கோவிலைக் கட்டினர். அந்தக் கோவிலில் எந்தச் சிலையும் வைத்து வழிபட விரும்பாத அவர்கள், தங்களுக்கான கடவுளாகத் துரியோதனனையே நினைத்து வழிபட முடிவு செய்தனர் என்கிறது தல வரலாறு.

கோவில் அமைப்பு

'மலநடா' (மலா மலை, நடா கோவில்) எனும் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கோவிலின் முகப்புப் பகுதியில், கேரளக் கட்டுமானப் பாணியில் அழகிய கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோவிலுக்குள், கருவறைப் பகுதி போல் சுற்றுச்சுவர்களுக்கான அடித்தளம் மட்டும் கட்டப்பட்டிருக்கிறது. நடுவில் சிலை அமைப்பதற்காக உயரமான மேடை மட்டும் உள்ளது. மேற்கூரை எதுவும் அமைக்கப்படவில்லை. இந்தப்பகுதியை அல்தரா அல்லது மண்டபம் என்று அழைக்கின்றனர்.

கோவிலில் நடைபெறும் முக்கியமான விழா நாட்களில், இந்தப் பகுதி முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் துரியோதனனையேத் தங்களது முதன்மைக் கடவுளாக நினைத்து வழிபடுகின்றனர்.

இந்த ஆலயத்தில் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்த வழிபாட்டுப் பணிகள் அனைத்தையும், குரவா வகுப்பினர்தான் செய்கின்றனர். இங்கு வந்து வழிபடுபவர்களின் வாழ்வில் வளமான மாற்றம் அமையும் என்கிறார்கள்.  

மலக்குடா பெருவிழா


ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாதம் நெல் அறுவடை செய்யும் முன்பாக இந்த ஆலயத்தில், 'மலக்குடா மகோத்சவம்' நடக் கிறது. இக்கோவிலின் ஊராளி எனப்படும் வழிபாட்டுப் பணி செய்பவர் பயன்படுத்தும் குடையைக் குறிப்பிடும் வகையில், இந்த விழாவை 'மலக்குடா மகோத்சவம்' என்கின்றனர். இந்த விழா தொடங்குவதற்கு முன்பாக கோவில் வழிபாட்டுப் பணியைச் செய்பவரும், அவருடைய பணிக்கு உதவியாக இருப்பவர்களும், இந்த ஆலயத்தின் துணைக்கோவில்களில் ஒன்றாக இருக்கும் குருக்கள்சேரி பகவதியம்மன் கோவிலுக்குச் சென்று, அங்குள்ள அம்மனை விழாவிற்கு வந்திருந்து சிறப்பிக்கும்படி அழைப்பு விடுக்கின்றனர். அவர்களது அழைப்பை ஏற்றுக் கொள்ளும் அம்மன், அங்கிருந்து புறப்பட்டுச் சென்று, மலநடா கோவிலுக்கு முன்பாக அமைக்கப்பட்டிருக்கும் மண்ட பத்தில் வந்து அமர்ந்து, திருவிழாவை காண்பதுடன், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருளாசியும் வழங்குகிறார்.

அமைவிடம்

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், குன்னத்தூர் வட்டம், பொருவழி எனும் கிராமத்தில், எடக்காடு எனுமிடத்தில் அமைந்திருக்கிறது இந்த மலைக்கோவில். அடூரில் இருந்து வட கிழக்கிலும், சாஸ்தாம் கோட்டா என்னும் இடத்தில் இருந்து தென்கிழக்கிலும் இந்த ஆலயம் உள்ளது. கொல்லம் நகரிலிருந்து பரணிக்காவு வழியாக 35 கிலோமீட்டர் பயணம் செய்தும், கொட்டாரக்கராவில் இருந்து புத்தூர் அல்லது ஏனாது வழியாக 25 கிலோமீட்டர் பயணம் செய்தும் கோவிலை அடையலாம்.   

-தேனி மு.சுப்பிரமணி.

பள்ளிப்பனா

இந்தக் கோவிலுக்கு உரியதாகக் கருதப்படும் ஏழு பகுதியில், மறைந்திருக்கும் தீயசக்திகளை நீக்கி, அங்கு வாழும் மக்களுடைய வாழ்க்கையை வளமடையச் செய்யும் விழாவாக, 'பள்ளிப்பனா' என்ற விழா நடைபெறுகிறது. இந்த விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது. இந்த விழா நடத்தப்படுவதற்கு ஒரு கதை இருக்கிறது.

மகாவிஷ்ணு அசுர தோஷத்தால் பாதிக்கப்பட்டு, பல்வேறு தீய சக்திகளினால் துன்பப்பட்டு வந்தார். அந்த அசுர தோஷத்தை நீக்க, வேலன் வகுப்பினரால் மட்டுமே முடியும் என்று சுப்பிரமணிய சுவாமி மூலம் தெரிந்து கொண்ட அவர், மூன்று உலகிலும் வேலன் வகுப்பினரைத் தேடினார். அவருடைய தோஷத்தை நீக்கக் கூடிய வேலன் வகுப்பினர் எவரும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஒருநாள், சிவபெருமான் வேலனாகவும், பார்வதி வேலத்தியாகவும், கணபதி மற்றும் சுப்பிரமணியர் பூத  கணங்களாகவும் அவர் முன்பாகத் தோன்றினர். அவர்கள் விஷ்ணுவின் அசுர தோஷத்தை நீக்குவதற்காகப் பல்வேறு அரிய செயலைச் செய்து முடித்தனர். இந்த நிகழ்வுதான் 'முதல் பள்ளிப்பனா' என்று கருதப்படுகிறது. இந்த விழாவில், இறைவனின் சக்தியை அதிகரிப்பதற்காக, 11 நாட்கள் 18 பெரும் செயல்கள் (மகாகர்மங்கள்) செய்யப்படுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com