கைரேகை அற்புதங்கள் : பிறக்கும் போதே ஏழரைச் சனி

கர்மாவின் விளைவை ஒருவருக்கு தெரிவிப்பவர்கள் நவக்கிரகங்கள். கர்மாவின் விதிக்கு ஏற்ப நன்மை, தீமைகளை கொடுப்பவர் சனி பகவான். நீதிக்கு அதிபதி சனி பகவான்.
கைரேகை அற்புதங்கள் : பிறக்கும் போதே ஏழரைச் சனி
Published on

நேர்மை தவறாதவர். ஜென்ம சனி காலத்தில் உபாதைகள் அதிகம் உண்டாகும். சனி, செவ்வாய், ராகு ஆகிய கிரகங்கள் சேர்க்கை பெற்றிருந்தால் பாதகமான பலன்களைக் கொடுக்கும். சனி பகவான் வக்கிரம் பெற்றிருக்கும் போது, சனி எந்த காரியத்திலும் தாமத போக்கு தென்படும்.

ஒரு குழந்தை பிறக்கும் போது ஏழரைச் சனி காலமாக அமைந் திருந்தால், மூன்றாவது சுற்று முடிந்து, நான்காவது சுற்று வரை வாழும் யோகம் உண்டு. ஒரு சுற்று என்பது முப்பது ஆண்டுகள். பிறக்கும் போது சனி காலமாக ஏழரைச் சனி நடந்தால், அந்தக் குழந்தையின் 23-வது வயதில் 2-வது சுற்று வரும். 53 வயதில் மூன்றாவது சுற்று நடைபெறும். 83-வது வயதில் நான்காம் சுற்று வரும். ஆக அந்தக் குழந்தைக்கு ஆயுள் மிகமிக தீர்க்கமாக அமைகிறது.

சனி தன் பார்வையாக 12-ம் வீட்டை பார்வை செய்தால், பொருள் களவு போகும் வாய்ப்பு உண்டு. சனி பகவான், தான் இருக்கும் இடத்தில் இருந்து 3, 7, 10 ஆகிய வீடுகளைப் பார்ப்பார். ஒரு வீட்டில் ஏறக்குறைய 2 ஆண்டுகள் சஞ்சரிப்பார். அதே சமயம் லக்னத்தில் இருந்து 12-ம் வீட்டில் செவ்வாய் ஆட்சி அல்லது மூலத் திரிகோணம் அமையப் பெற்றிருந்தால், அந்த நபருக்கு கடன் தொல்லை இருக்காது அல்லது கடன் தொல்லையில் இருந்து விடுபடுவார் என்று சொல்லப்படுகிறது. ஜாதகத்தில் 12-ம் இடத்தில் சனி இருந்தால், அந்த ஜாதகருக்கு காது மந்தமாக இருக்கும். கேட்கும் திறன் குறைவாக இருக்கும்.

இனி கைரேகை சாஸ்திரப்படி சனியைப் பற்றி ஆராயலாம். நடுவிரலின் அடிப்பாகத்தில் அமைந்திருக்கும் மேடு தான் சனி மேடு. ஒரு மனிதனின் வாழ்க்கை, இந்த மேடு அமைந்திருக்கும் விதத்தை வைத்து தான் அமைகிறது. சனி மேடு உப்பலாக, எந்தவித வெட்டுக் குத்து இன்றி சுத்தமாக இருந்தால், அந்த நபர் சனி பகவானின் அருளுக்கு பாத்திரமானவர் ஆவார். சனி மேட்டில் இருந்து ஒரு செங்குத்து ரேகை மட்டும் மேல் நோக்கி சென்று இருந்தால், அது மிகவும் நல்ல அமைப்பாகும். ஏராளமான சிறு சிறு ரேகைகள், சனி மேட்டில் இருப்பது அவ்வளவு நல்லதல்ல. அது துரதிர்ஷ்டத்தை குறிக்கும் அமைப்பாகும். சனி மேட்டில் சனி வளையம் இருப்பது, எந்த காரியத்திலும் வெற்றி உறுதி என்பதை சொல்லும் அறிகுறியாகும்.

கையில் ஆயுள் ரேகை வட்டமாக, எந்த குறுக்கு வெட்டும் இல்லாமல் அமைந்த நபருக்கு ஆயுள்காரகனான சனி பகவான் மிகமிக நீண்ட ஆயுளை வழங்குவார். அந்த நபருக்கு ஆயுள் 90 வயதுக்கு மேல் அமைவது உறுதி.

- கடுக்கரை என்.செண்பகராமன், டி.ஏ.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com