கைரேகை அற்புதங்கள் : சனி பகவானின் பார்வை பலம்

கருநீல வண்ணம் கொண்டவரும், எம தர்மராஜாவின் சகோதரரும், சூரியன்- சாயாதேவியின் புத்திரருமான சனீஸ்வர பகவானை வழிபடுவது வாழ்வில் வளம் சேர்க்கும்.
கைரேகை அற்புதங்கள் : சனி பகவானின் பார்வை பலம்
Published on

உலகில் சனிக்கிரகம் என்றால், பலருக்கு அச்சம். பயப்படும் அளவுக்கு சனிக்கிரகம் அப்படி ஒன்றும் கடுதல் செய்வதில்லை. ஜாதகத்தில் பலமுள்ள சனி பகவான் திரண்ட செல்வம், நீண்ட ஆயுள், பெரிய பதவி, செல்வாக்கு, அரசாங்கத்தில் உயர்ந்த உத்தியோகம் போன்றவற்றை கொடுக்கும். ஒருவர் ஜாதகத்தில் சனி உச்சமாக அமைந்து, அவருக்கு குருவின் பார்வையும் ஏற்பட்டு இருக்க, சனி தசையும் நடைபெறுமானால் அந்த ஜாதகர் குப்பை மேட்டில் இருந்தாலும், கோபுரத்தின் உச்சிக்கு வந்து விடுவார் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

சனி பகவான், தான் அமர்ந்த வீட்டைப் பார்க்கும் இடத்துக்கு வலிமை அதிகம் உண்டு. சனி துலா, இடப லக்ன ஜாதகர்களுக்கு யோக கிரகமாக செயல்படு கிறார். அவர் ஜாதகத்தில் பலமுடன் அமைந்து, அவரது தசா காலமும் நடைமுறையில் வரும்போது, அந்த ஜாதகர்களுக்கு ராஜயோக பலன்களை வாரி வழங்குவார். பிறக்கும் போது, 7 ஆண்டு சனி காலம் இருப்பவர்களுக்கு முதல் சுற்று முடிந்து, இரண்டாவது சுற்று தனது 23-வது வயதில் ஆரம்பமாகும். குருவால் பார்க்கப்படும் சனி பகவான் தொல்லைகளை மட்டுப்படுத்துவார். மனை, நிலம் போன்றவற்றால் ஆதாயத்தைக் கொடுப்பார். சனி- செவ்வாய் சேர்க்கை அல்லது பரஸ்பர பார்வை, அதீத கெடுதல்களை உண்டாக்கக்கூடியது. சனி பகவான் நல்லோருக்கு நலம் புரியும் கிரகம். சிறந்த நீதிமான். ஆணவத்துடன் செயல்படும் துஷ்டர்களை தன் பார்வை மூலம் இருக்கும் இடம் தெரியாமல் அழிக்கும் வல்லமை கொண்டவர்.

இனி கைரேகை பலன்படி சனி பகவானைப் பற்றி அறிந்து கொள்ளலாம். நடுவிரலின் அடிப் பாகத்தில் இருக்கும் மேடு சனி மேடு என்று அழைக்கப்படுகிறது. இந்த சனி மேட்டில் ஒரு ரேகை மட்டும் செங்குத்தாக அமைந்தவர், மிக மிக யோகசாலியாவார். மாறாக, இரண்டு செங்குத்து ரேகை அமைந்திருந்தால், அந்த நபருக்கு 36 வயதுக்கு மேல் அதிர்ஷ்டம் பொங்கும். சனி மேட்டில் சனி வளையம் இருப்பின் காரியங்களில் வெற்றி உண்டாகும். சனி மேட்டில் கரும்புள்ளி இருப்பது கெடுதல்களுக்கான அறிகுறி. மனித சக்தியை ஆட்டிப்படைக்கும் கிரகம் சனி. நல்ல சனி மேடும், அப்பழுக்கில்லாத விதி ரேகையும் அமைந்த ஜாதகர் பெரும் பாக்கியசாலியாவான். சனி மேடு உப்பலாக நல்லவிதமாக அமைந்தவருக்கு சனி பகவானின் அருள் நிச்சயம் கிடைக்கும். சனி மேடு சரிவர அமையாதவருக்கு அவர்கள் செய்யும் காரியங்களில் தடையும், முன்னேற்றத்தில் இடையூறும் வந்து சேரலாம். வாழ்வில் துன்பங்கள் இருந்துகொண்ட இருக்கும். சனி மேட்டின் குறுக்காக, ரேகை அமைந்திருக்கக் கூடாது. அந்த அமைப்பு துரதிஷ்டத்தை தெரிவிக்கும் அறிகுறியாகும்.

- கடுக்கரை என்.செண்பகராமன், டி.ஏ.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com