அழகர்கோவில் ஆடி பெருந்திருவிழா கொடியேற்றம்: 9-ந் தேதி தேரோட்டம்

இந்த ஆண்டுக்கான ஆடி பிரம்மோற்சவ திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அழகர்கோவில் ஆடி பெருந்திருவிழா கொடியேற்றம்: 9-ந் தேதி தேரோட்டம்
Published on

மதுரை அருகே அழகர்மலை அடிவாரத்தில் திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என போற்றி அழைக்கப்படும், 108 வைணவ தலங்களில் கள்ளழகர் கோவிலும் ஒன்று. இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை மற்றும் ஆடி பிரம்மோற்சவ விழா பிரசித்தி பெற்றவை.

இந்த ஆண்டுக்கான ஆடி பிரம்மோற்சவ திருவிழா நேற்று காலை 9.35 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்படி தங்க கொடிமரத்தில் கருடன் உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது. பின்னர் நூபுர கங்கை தீர்த்தத்துடன் பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் உற்சவர் கள்ளழகர், ஸ்ரீதேவி, பூமிதேவியருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனைகள் நடந்தன.

பின்னர் தேருக்கு அருகில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நடந்தது. இரவு அன்ன வாகனத்தில் கள்ளழகர் புறப்பாடு நடைபெற்றது. கொடியேற்ற விழாவில் காவில் துணை ஆணையர் யக்ஞ நாராயணன், மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரியபுள்ளான், அறங்காவலர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், ரவிக்குமார், மீனாட்சிபிரியாந்த், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, மக்கள் தொடர்பு அலுவலர் முருகன் மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இன்று காலையில் தங்க பல்லக்கிலும், இரவு சிம்ம வாகனத்திலும், 3-ந் தேதி காலையில் ஆடி பெருக்கு விழாவும், வழக்கம் போல் சுவாமி புறப்பாடும், இரவு அனுமன் வாகனத்திலும், 4-ந் தேதி இரவு கருட வாகனத்திலும், 5-ந் தேதி பல்லக்கிலும் அழகர் எழுந்தருள்கிறார். அங்கிருந்து புறப்பாடாகி மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு சென்று திரும்புவார்.

6-ந் தேதி இரவு யானை வாகனத்திலும், 7-ந் தேதி இரவு புஷ்ப சப்பரத்தில் வீதி உலாவும் நடைபெறும். 8-ந் தேதி இரவு தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருள்கிறார். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ந் தேதி கோலாகலமாக நடக்கிறது. 10-ந் தேதி காலை தீர்த்தவாரி, 11-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com