திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் கருட சேவை

வைத்தமாநிதி பெருமாள் கருட வாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி, மாட வீதி, ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் கருட சேவை
Published on

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நவதிருப்பதி ஸ்தலங்களில் திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில் 8-வது ஸ்தலம் ஆகும். செவ்வாய் ஸ்தலமும், நிதியை இழந்த குபேரனுக்கு அவன் இழந்த செல்வத்தை தேடி எடுத்துக்கொண்டு பின்னர் குபேரன் வணங்கும் ஜோதியாய் அருள்பாலித்த ஸ்தலமாகும்.

இங்கு வைத்தமாநிதி பெருமாள் தலைக்கு மரக்கால் கொண்டு சயன திருக்கோலத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் கடந்த 20ம் தேதி புதன்கிழமை ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் வைத்தமாநிதி பெருமாள் மாடவீதி எழுந்தருளல், இரவில் வாகன சேவை நடைபெறுகிறது.

அவ்வகையில் விழாவின் 5-ம் நாளான நேற்று கருடசேவை நடைபெற்றது. இதையொட்டி மாலை 7மணி அளவில் சுவாமி வைத்தமாநிதி பெருமாள் மற்றும் மதுரகவி ஆழ்வார் ஆகிய இருவரும் வாகன குறட்டிற்கு வந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு 7.45 மணிக்கு சுவாமி வைத்தமாநிதி பெருமாள் கருட வாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி, மாட வீதி, ரதவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

29ம் தேதி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com