மாங்கல்ய பலம் தரும் மகளிருக்கான விரதம்

15-3-2019 காரடையான் நோன்பு
மாங்கல்ய பலம் தரும் மகளிருக்கான விரதம்
Published on

மாசி மாதம் ஏகாதசியை ஒட்டி வரும் சிறப்பு மிக்க விரதம் காரடையான் நோன்பு. பெண்களின் மாங்கல்ய பலத்துக்காக மேற்கொள்ளப்படும் விரதத்தில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இந்த விரதம் சாவித்திரி விரதம், காமாட்சி விரதம் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

அஸ்வபதி என்ற மன்னனின் மகள் சாவித்திரி. இவள் ஒரு முறை காட்டிற்குள் சென்றபோது, அங்கு வாழ்ந்து வந்த சத்தியவான் என்ற இளைஞனை சந்தித்து காதல் வயப்பட்டாள். நாட்டிற்கு திரும்பியதும், தன்னுடைய காதலைப்பற்றி தந்தையிடம் தெரிவித்தாள்.

அஸ்வபதி மன்னன், அந்த இளைஞன் யார் என்று விசாரிக்க நினைத்தார். அப்போது நாரதர் மூலமாக, அவன் ஒரு அரசகுமாரன் என்பதும், குறைந்த ஆயுளைக் கொண்டவன் என்பதும் தெரியவந்தது. சத்தியவானின் ரகசியத்தை அறிந்து கொண்ட மன்னன், தன்னுடைய மகளை அவனுக்கு மணம் முடித்துக் கொடுக்கத் தயங்கினான். ஆனால் சாவித்திரி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. சத்தியவானைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று தந்தையிடம் உறுதியாகச் சொல்லிவிட்டாள்.

மகளின் பிடிவாதத்தை கண்டு மனம் பதறினாலும், வேறு வழியில்லாமல் சத்தியவானுக்கே, சாவித்திரியை மணம் முடித்துக் கொடுத்தார். திருணத்திற்குப் பிறகு காட்டில் சத்தியவானுடன் வாழ்ந்து வந்தாள், சாவித்திரி. சரியாக ஒரு வருடம் முடிந்த நிலையில், சாவித்திரியின் மடியில் படுத்திருந்த நிலையிலேயே சத்தியவான் உயிர் பிரிந்தது. அன்றைய தினம் காரடையான் நோன்பு ஆகும்.

யார் கண்ணுக்கும் தென் படாத வகையில் அரூபமாக வந்த எமதர்மன், சத்தியவானின் உயிரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். ஆனால் காரடையான் நோன்பை முறைப்படி செய்து வந்த சாவித்திரியின் கண்களில் இருந்து எமதர்மன் தப்ப முடியவில்லை. அது எமதர்மனுக்கே தெரிந்தாலும் கூட, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து அகல முற்பட்டார்.

எமதர்மன் செல்லச் செல்ல, அவரைப் பின்தொடர்ந்து சென்றாள் சாவித்திரி. இவள் எதற்காக நம்மை பின் தொடர்ந்து வருகிறாள் என்று நினைத்த எம தர்மன், அதை அவளிடமே கேட்டுத் தெரிந்து கொள்வது என்று முடிவு செய்தார். ஏ, பெண்ணே.. உனக்கு என்ன வேண்டும். எதற்காக என்னைப் பின் தொடர்ந்து வருகிறாய்? என்று கேட்டார்.

சாவித்திரி அதற்கு எந்தப் பதிலையும் சொல்லவில்லை.

எமதர்மனே தொடர்ந்தார். உன்னுடைய கணவனுக்காகத்தான் நீ என்னை பின் தொடர்கிறாய் என்றால், அதில் உனக்கு என்னால் எந்த நன்மைகளையும் செய்ய முடியாது. அவனது உயிர் திரும்புவது முடியாத காரியம். எனவே வேறு ஏதாவது வரம் என்னிடம் இருந்து உனக்கு வேண்டுமானால் கேள், நிச்சயமாக தருகிறேன் என்றார்.

எமதர்மன் அப்படிக் கேட்டதும், சாவித்திரி சாதுரியமாக செயல்பட்டு ஒரு வரத்தைக் கேட்டாள். அதாவது எனக்குப் பிறக்கின்ற நூறு குழந்தைகளைத் தன்னுடைய மடியில் வைத்துக் கொண்டு, என் மாமனார் கொஞ்ச வேண்டும் என்று கேட்டாள்.

சாவித்திரி அப்படிக் கேட்டதும், யோசிக்காமல் எமதர்மன் அப்படியே ஆகட்டும் என்று சொல்லி விட்டு, அங்கிருந்து புறப்பட்டார்.

ஆனால் அவரை மீண்டும் சாவித்திரி தடுத்து நிறுத்தினாள்.

எதற்காக தடுத்தாய்? என்பது போல் பார்த்த எமதர்மனிடம், சரி.. நீங்கள் கொடுத்த வரத்தின்படி என்னுடைய கணவரின் உயிரைத் திருப்பித் தாருங்கள் என்று கேட்டாள்.

அப்போதுதான் அவருக்கு, எப்படிப்பட்ட ஒரு வரத்தைக் கொடுத்திருக்கிறோம் என்பது தெரிந்தது. கொடுத்த வரத்தை மீற முடியாது என்பதால், சத்தியவானின் உயிரை திருப்பிக் கொடுத்து விட்டு அங்கிருந்து அகன்றார் எமதர்மன்.

சத்தியவானின் உயிரை சாவித்திரி மீண்டும் பெறு வதற்கு அவளுக்கு பெரும் உதவியாக இருந்தது, அவள் முறையாக கடைப்பிடித்து வந்த காரடையான் நோன்புதான். அதனால் தான் இந்த விரதம் சாவித்திரி விரதம் என்றும் பெயர்பெற்றது. இது காமாட்சி அம்மன் கடைப்பிடித்த விரதம் என்பதால் அது காமாட்சி விரதம் என்றும் பெயரானது.

விரதம் இருப்பது எப்படி?

திருமணம் முடித்த பெண்கள், காரடையான் நோன்பு தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும். நீராடும் போது முகத்தில் மஞ்சள் பூசி நீராடுவது சிறப்பு. நெற்றியில் குங்குமம் வைத்து வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் பூஜை அறைக்குள் கோலம் போட வேண்டும். அந்த கோலத்தின் மீது கும்பம் வைத்து, கும்பத்திற்கு சந்தனம், குங்குமம் இட்டு, பூ சூட்டி, கும்பத்தின் மீது மஞ்சள் தடவிய நோன்பு கயிற்றைக் கட்ட வேண்டும். இந்த விரதத்திற்காக காரடை செய்து நைவேத்தியம் படைக்கலாம்.

கார் அரிசியை மாவாக மாற்றி, அதனுடன் புதியதாக விளைந்த துவரையையும் சேர்த்து அடை செய்து நைவேத்தியமாக படைக்க வேண்டும். அப்போது அம்மனுக்குரிய சுலோகங்களை சொல்லி, கும்பத்தில் கட்டியிருக்கும் நோன்பு கயிற்றை எடுத்து, நீடித்த மாங்கல்ய பலம் தர வேண்டும் தாயே என்று வேண்டிக்கொண்டு, இறைவியை நினைத்து கணவன் கையால், தங்களது கையில் அல்லது கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். இந்த விரதத்தை பெண்கள் மேற்கொள்வதால், கணவனுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com