குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம்- ஏராளமான பக்தர்கள் தரிசனம்

சிரசு ஊர்வலத்தின்போது கெங்கையம்மனுக்கு பூமாலை சூட்டியும், கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம்- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
Published on

வேலூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் இன்று நடந்தது. காலை 5.30 மணியளவில் குடியாத்தம் தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோவிலில் இருந்து அம்மன் சிரசு ஊர்வலம் புறப்பட்டது. சிலம்பாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன், பம்பை, உடுக்கை, மேள-தாளம் முழங்க அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.

பழைய ஆஸ்பத்திரி ரோடு, காந்திரோடு, ஜவஹர்லால் தெரு வழியாக நடைபெற்ற ஊர்வலம் கெங்கையம்மன் கோவிலில் நிறைவடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, தரணம்பேட்டை முதல்கோபாலபுரம் வரை சாலையின் இருபுறமும் பக்தர்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர். வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சிரசு ஊர்வலம் சென்ற பாதையில் கெங்கையம்மனுக்கு பூமாலை சூட்டியும், கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு மக்கள் வெள்ளத்தில் நீந்திச்சென்ற சிரசு, கெங்கையம்மன் கோவில் சிரசு மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த சண்டாளச்சி உடலில் பொருத்தப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் தேங்காய்களை உடைத்தும், ஆடு, கோழி பலியிட்டும் வழிபட்டனர். பலர் அலகுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். தெடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடந்தன. பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மலர் மாலை, எலுமிச்சை மாலை, ரூபாய் நோட்டு மாலை ஆகியவற்றை பக்தர்கள் அம்மனுக்கு அணிவித்து வழிபட்டனர். வழி எங்கும் பக்தர்களுக்கு நீர், மோர், கூழ் இலவசமாக வழங்கினர். தொடர்ந்து இன்று இரவு அம்மன் உடலில் இருந்து சிரசு பிரிக்கப்பட்டு, கவுண்டன்ய ஆற்றங்கரையில் அலங்காரம் கலைக்கப்பட்டு மீண்டும் கோவிலுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

மகா விஷ்ணுவின் அம்சமான பரசுராமர், தந்தையின் உத்தரவை ஏற்று தாய் கெங்கையம்மனின் தலையை வெட்டி, மீண்டும் உயிர்ப்பித்த புராண கதையை நினைவுகூறும் வகையில் கெங்கையம்மன் சிரசு திருவிழா நடத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com