அருள் தரும் அனுமன் ஆலயங்கள்

அருள் தரும் அனுமன் ஆலயங்கள்
Published on

ராமாயணத்தில் எண்ணற்ற நாயகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ராமபிரான், சீதைக்கு அடுத்தபடியாக பக்தர்களால் வணங்கப்படும் கடவுளாக இருப்பவர், அனுமன் மட்டுமே. அவரை சிவபெருமானின் வடிவமாக புராணங்கள் சொல்கின்றன. சீதாதேவியால், சிரஞ்சீவியாக வாழும் வரத்தைப் பெற்ற அனுமன், இந்த பூலோகத்திலேயே அருவமாக இருந்து ராமநாமம் சொல்லும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவதாக நம்பப்படுகிறது. இவருக்கு இந்தியா முழுவதும் எண்ணற்ற ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான சில ஆலயங்களை ப் பற்றி இங்கே பார்க்கலாம்.

சங்கட் மோட்சன்

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் அசி நதிக்கரையில் அமைந்துள்ளது, 'சங்கட் மோட்சன் அனுமன்' கோவில். 16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த , புகழ்பெற்ற இந்து மதபோதகரும், கவிஞருமான ஸ்ரீ கோஸ்வாமி துளசிதாஸ் என்பரால் இந்த ஆலயம் நிறுவப்பட்டதாக சொல்லப்படுகிறது. 'சங்கட் மோட்சன்' என்றால் 'தொல்லைகளை நீக்குபவர்' என்று பொருள். ராமபிரானின் மீது அசையாத பக்தியைக் கொண்ட அனுமன், இந்த ஆலயத்தில் உள்ள ராமபிரானை நோக்கி வீற்றிருக்கிறார்.

பாண்டவர்கள் எழுப்பிய கோவில்

இந்தியாவின் தலை நகரான புதுடெல்லியில் கன்னாட் பிளேஸ் என்ற இடத்தில் இருக்கிறது, பால அனுமன் கோவில். மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களின் தலை நகராக விளங்கியது, இந்திரபிரஸ்தம். கிருஷ்ணனின் உத்தரவின் பேரில், இந்திரன் மூலமாக அனுப்பப்பட்ட மயன், இந்த நகரத்தை பாண்டவர்களுக்காக எழுப்பியதாக மகாபாரதம் சொல்கிறது. யமுனை ஆற்றின் கரையில் அமைந்த இந்திரபிரஸ்தத்தில் பாண்டவர்கள் உருவாக்கிய ஐந்து முக்கியமான ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும். இங்குள்ள அனுமன் சிலை , 'ஸ்ரீ அனுமன் ஜி மகராஜ்' என்று வணங்கப்படுகிறது, அதாவது, 'பெரிய அனுமன்' என்று பொருள். இந்தக் கோவிலின் கதவு வெள்ளி முலாம் பூசப்பட்டு, அதில் ராமாயணக் கதையின் காட்சிகள் பொறிக்கப்பட்டுள்ளது.

குழந்தை பருவம்

ராஜஸ்தான் மாநிலம் மெகந்திப்பூர் எல்லையில் இருக்கிறது, பாலாஜி அனுமன் கோவில். இங்கு அனுமன், குழந்தைப் பருவத்தில் இருப்பதால் இவரை 'பாலா' என்று அழைக்கிறார்கள். இது இந்தியாவில் அமைந்த மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றாகும். இந்த ஆலயத்தில் நோய்களுக்காகவும், தீய சக்திகளை விரட்டுதல், பில்லி- சூனியம் போன்றவற்றிற்காகவும் வழிபாடு செய்கிறார்கள்.

கின்னஸ் சாதனை

குஜராத் மாநிலம் ஜாம்நகரில், ரன்மாய் ஏரியின் தென்கிழக்கு பகுதியில் இருக்கிறது, பால அனுமன் கோவில். இந்த ஆலயம் சாதனை ஒன்றிற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இந்த ஆலயத்தில், 1964-ம் ஆண்டு முதல் 'ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய்ராம்' என்ற மந்திரத்தை , 24 மணி நேரமும் உச்சரிக்கிறார்கள். இடை விடாத மந்திர உச்சரிப்பின் காரணமாகத்தான், இந்த ஆலயம் கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளது. ஜாம்நகரில் கட்டப்பட்ட பழமையான ஆலயங்களில் ஒன்றாகத் திகழும் இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம்.

ஆன்மிக கண்காட்சி

ராஜஸ்தான் மாநிலம் சலசர் என்ற இடத்தில் பாலாஜி அனுமன் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்திலும் அனுமன், குழந்தைப் பருவ கோலத்தில்தான் காட்சி தருகிறார். இவருக்கு வித்தியாசமான அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. இந்த ஆலயம் சலசர் நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சைத்ரா மற்றும் அஷ்வின் ஆகிய மாதங்களில் இந்த ஆலயத்தில் ஆன்மிகம் சார்ந்த கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்பதற்காக இந்தியா முழுவதும் இருந்து பல அமைப்புகள் வருகின்றன.

மிகப்பெரிய ஆலயம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ராம்காட் என்ற இடத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, சித்ராகூட். இங்கு மரங்கள் நிறைந்த மலைகளுக்குள் அமைந்திருக்கிறது, அனுமன் தாரா என்ற ஆலயம். இது அனுமனுக்காக அமைக்கப்பட்ட மிகப்பெரிய ஆலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அனுமன் சிலையின் மேல் பாய்ந்தோடும் நீரோடையின் காரணமாக, 'அனுமன் தாரா' என்று அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தில் உள்ள அனுமன் சிலை , சிவப்பு நிறக் கல்லில் வடிக்கப்பட்டிருக்கிறது. இந்த இடம் அதிகமான சுற்றுலாப் பயணிகளால் ஈர்க்கப்படும் பகுதியாக இருக்கிறது.

உறங்கும் அனுமன்

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் அலகாபாத் கோட்டை அருகே அமைந்திருக்கிறது, 'படே அனுமன்' என்று அழைக்கப்படும், 'லெ தே அனுமன் கோவில்'. இந்தியாவில் உள்ள மிகப் பழமையான ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும். மிகவும் புனிதத்துவம் வாய்ந்த இடமாகவும் இந்த ஆலயம் இருக்கும் பகுதி சொல்லப்படுகிறது. இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் இந்த ஆலய அனுமன், உறங்கும் நிலையில் காணப்படுகிறார். இவ்வாலய அனுமன் சயன கோலத்தில் உறங்கிக் கொண்டிருப்பதால் இவரை 'லெ தே அனுமன்' என்று அழைக்கின்றனர்.

மீசையுடன் அனுமன்

குஜராத் மாநிலம் சலங்பூர் என்ற இடத்தில் 'காஸ்த்பஞ்சன் அனுமன் மந்திர்' என்ற பெயரில் அனுமன் கோவில் உள்ளது. இந்த அனுமனுக்கு 'துக்கங்களை அழிப்பவர்' என்று பொருள். இந்த ஆஞ்சநேயர் எங்கும் இல்லாத தோற்றத்தில் வித்தியாசமாக காணப்படுகிறார். அதாவது மீசையுடன் பற்களை கடித்தபடி, தன் காலடியின் கீழ் ஒரு பெண் அரக்கியை நசுக்கிய நிலையில் இருக்கிறார். இவரைச் சுற்றிலும், பழங்களை கையில் வைத்திருக்கும் வானர உதவியாளர்கள் இருப்பதுபபோல் இருக்கிறது. இவர் பக்தர்களின் துன்பங்களை அகற்றுபவராக அறியப்படுகிறார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com