திருமுல்லைவாயல் மாசிலாமணீஸ்வரர் கோவில் சிறப்புகள்

திருமுல்லைவாயல் தலத்தில் நந்தி தேவர், சுவாமியை பார்த்தபடி இல்லாமல் திரும்பி எதிர்திசையில் கொடி மரத்தை பார்த்தபடி இருப்பார்.
திருமுல்லைவாயல் மாசிலாமணீஸ்வரர் கோவில் சிறப்புகள்
Published on

சென்னை அம்பத்தூர் அருகில் உள்ள திருமுல்லைவாயிலில் அமைந்துள்ளது மாசிலாமணீஸ்வரர் கோவில். தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவ தலங்களில் 22-வது தலமான இங்கு, சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சுயம்புலிங்கமாக தலையில் வெட்டுப்பட்ட தழும்புடன் காட்சி தருகிறார். அதாவது, மன்னன் தொண்டைமான் முல்லைக்கொடிகளை வாளால் வெட்டியபோது, கொடிகளுக்கு பின்னால் இருந்த லிங்கத்தின் மீது பட்டதால் இந்த காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த காயத்தை குளிர்விக்கும் வகையில் ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அருளும் சிவபெருமான், சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் இரண்டு தினங்கள் மட்டும் சந்தனக்காப்பு இல்லாமல் நிஜ திருமேனியுடன் காட்சி தருகிறார். அந்நேரத்தில் இவரை வழிபட்டால் பாவங்கள் நீங்கப்பெற்று, முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இத்தலத்து இறைவனுக்கு வெந்நீர் அபிஷேகம் நடைபெறும். லிங்கத்தின் மீது சந்தனக்காப்பு இருப்பதால் லிங்கப் பகுதிக்கு அபிஷேகங்கள் கிடையாது. ஆவுடையாருக்குத் தான் அபிஷேகம் செய்யப்படும்.

இத்தலத்து மூலவர், ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பினால் மறைக்கப்பட்டுள்ளதால் தீண்டாத் திருமேனியுடையர் என்றும் அழைக்கப்படுகிறார்.

இத்தலத்தில் உள்ள நந்தி தேவர், போரில் மன்னன் தொண்டைமானுக்கு துணையாகச் சென்றதாக கூறுவர். இதனால் இங்குள்ள நந்தி தேவர், சுவாமியை பார்த்தபடி இல்லாமல் திரும்பி துவஜஸ்தம்பத்தை (கொடி மரம்) பார்த்தபடி இருப்பார். இங்கு சுவாமியே பிரதானம் என்பதால் நவக்கிரக சன்னதி இல்லை. சூரியனுக்கு மட்டும் சன்னதி உள்ளது.

சுவாமிக்கு முன்னால் இரண்டு எருக்கந்தூண்கள் பூண்கள் இடப்பட்டு உள்ளன. இவை தொண்டைமான் மன்னன், அசுரர்களிடமிருந்து எடுத்து வந்ததாக தல புராணம் கூறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com