புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக உருவானது எப்படி?

புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் துன்பங்களை நீக்கி ஆனந்தம் தருவார் என்பது நம்பிக்கை.
புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக உருவானது எப்படி?
Published on

புரட்டாசி மாதம் பெருமாளின் அனுகிரகம் நிறைந்த மாதம். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளை வழிபடுவதற்கு உகந்த நாட்கள். இவ்வாறு புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக உருவானதன் பின்னணியில் புராண தகவல் ஒன்று சொல்லப்படுகிறது.

சனி பகவான், கலியுகத்தில் முதல் முதலாக வரும் வழியில் நாரதர் அவரை பார்த்தார். அப்போது, சனிபகவானிடம் "தாம் பூலோகத்தில் எங்கு வேண்டுமானாலும் உங்கள் சக்தியின் மூலம் யாரை வேண்டுமானால் துன்பப்படுத்தலாம். ஆனால் திருமலை பக்கம் சென்றுவிடாதீர்கள்" என்று அவரை தூண்டி விடுவதுபோல கூறினார்.

அதைக்கேட்ட சனி பகவான், என்னை யார் என்ன செய்ய முடியும்? என்று கூறி திருமலையின் மேல் தன் காலை வைத்தார். கால் வைத்ததும் அடுத்த நொடி சனி பகவான் தூக்கி வீசப்பட்டார். திருமலையில் யார் இருக்கிறார் என தெரிந்தும் மற்றவரை துன்பப்படுத்தி இன்பம்காணும் சனி பகவானே துன்பப்பட்டு நடு நடுங்கி தன்னையும்படைத்து வழிநடத்தும் மகா விஷ்ணுவே இங்கு திருவேங்கடவனாக இருப்பதைக் கண்டு அவர் பாதம் பணிந்து மன்னிப்பு கேட்டார்.

கோபம் தணிந்த பெருமாள், 'என்னையே நினைத்து வாழும் என்னுடைய பக்தர்களுக்கு நீ எந்த துன்பமும் கொடுக்க கூடாது' என்ற நிபந்தனையுடன் சனி பகவானுக்கு மன்னிப்பு வழங்கினார். சனியும் பணிவுடன் 'உங்களின் பக்தர்களை நான் என்றும் துன்பப்படுத்த மாட்டேன்' என்று உறுதி அளித்தார்.

பிறகு சனிபகவான் பெருமாளிடம் ஒரு வரம் கேட்டார். 'நான் பிறந்தது புரட்டாசி சனிக்கிழமை. அதனால் அந்த நாளை தங்களுக்கு உகந்த நாளாக தங்கள் பக்தர்கள் பூஜித்து வேண்டினால் அவர்களுக்கு வேண்டிய வரத்தை தாங்கள் தரவேண்டும்!' என்ற வரத்தை கேட்டார். பெருமாளும் சனி பகவான் கேட்ட வரத்தை அளித்து, சனிக்கிழமையை தனக்கு உகந்த நாளாக ஏற்றுக் கொண்டார்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் மிகவும் சிறப்பான வரங்களை தந்து வருடம் முழுவதும் நமது துன்பங்களை நீக்கி ஆனந்தம் தருவார். அதிலும், ஏழரை சனியால் பீடிக்கப்பட்டவர்கள் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் சனியின் பாதிப்பு நிச்சயம் நீங்கும் என்பது நம்பிக்கை. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com