மேல்மருவத்தூரில் சித்ரா பவுர்ணமி விழா

மேல்மருவத்தூரில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது.
மேல்மருவத்தூரில் சித்ரா பவுர்ணமி விழா
Published on

மதுராந்தகம்,

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. இதையொட்டி மழைவளம் பெருகவும், மக்கள் மனநிம்மதியுடன் வாழ்ந்திடவும், உலக நன்மைக்காக 1008-க்கும் மேற்பட்ட சிறப்பு யாககுண்டங்கள் அமைத்து கலச, விளக்கு, வேள்வி பூஜை நடந்தது. இதனை ஆன்மிக குரு பங்காரு அடிகளார் நடத்தி வைத்தார். வேள்வியில் சூலம், ஒற்றை நாகம், இரட்டை நாகம், முக்கோணம், சதுரம், சாய் சதுரம், அறுகோணம், எண்கோணம், வட்டம் போன்ற கோணங்களை உள்ளடக்கி அமைத்து 1000-க்கும் மேற்பட்ட யாககுண்டங்களையும், 1000-க்கும் மேற்பட்ட கலச, விளக்குகளையும் பங்காரு அடிகளார் அவர்களின் வழிகாட்டுதலின்படி அமைத்து வேள்வி பூஜை நடைபெற்றது.

சித்தர்பீடத்தின் ஓம்சக்தி மேடையின் முன்பாக பிரமாண்டமான அண்டவெளி சக்கரம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் நவகிரகங்கள் வைக்கப்பட்டிருந்தது.

கருவறை முன்பாக பஞ்ச தெய்வ சக்கரமும், புற்று மண்டபத்தின் முன்பாக தீமைகளையும் அதர்மத்தையும் அகற்றும் அடையாளமாக கத்தி, பிரம்பு, சாட்டை, சூலம், கதை, சங்கு சக்கரம் போன்றவற்றை வைத்து சக்கரங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

வேள்விக்காக கடந்த 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு குருபூஜை நடத்தப்பட்டு வேள்விச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. 1,000 செவ்வாடை தொண்டர்கள் வேள்வி, உணவு, குடிநீர், பாதுகாப்பு மற்றும் சுகாதார பணிகளில் ஈடுபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வேள்வியின் தொடக்கமாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலையில் யாக சாலை முழுவதும் திருஷ்டி எடுக்கப்பட்டது. தொடர்ந்து கோ பூஜை நடைபெற்றது.

வேள்வியில் வேளாண் துறை அமைச்சர் துரைக் கண்ணு, அரசு தேர்வாணைக்குழு தலைவர் அருள்மொழி, ஓய்வுபெற்ற நீதிபதிகள் முருகேசன் மற்றும் ராஜேஸ்வரன், தென்னிந்திய ரெயில்வே அதிகாரி செந்தில்குமார், ஓய்வுபெற்ற தென்னிந்திய ரெயில்வே அதிகாரி -ஐயந்த், தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் டாக்டர் மகேந்திரன், முதல்-அமைச்சரின் சிறப்பு திட்ட அதிகாரி ராதாகிருஷ்ணன், காஞ்சீபுரம் மாவட்ட நீதிபதி கருணாநிதி மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இயக்க துணைத்தலைவர் கோ.ப.அன்பழகன் விழாவில் பங்கேற்றார்.

பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் பிற ஏற்பாடுகளை ஆதிபராசக்தி இளைஞரணி மற்றும் மகளிர் அணியினர் முறையே இயக்க துணைத் தலைவர்கள் கோ.ப.செந்தில்குமார் மற்றும் ஸ்ரீதேவி ரமேஷ் தலைமையில் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com