பக்தர்கள் வருகை அதிகரிப்பு: சபரிமலையில் 9 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம்

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சுக்கு நீர், பிஸ்கட், உண்ணியப்பம் போன்றவை தேவஸ்தான தன்னார்வ தொண்டர்களால் வழங்கப்படுகிறது.
பக்தர்கள் வருகை அதிகரிப்பு: சபரிமலையில் 9 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம்
Published on

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு சீசனையொட்டி கடந்த மாதம் 16 -ந் தேதி நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. தினமும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து, இருமுடி கட்டி முன்பதிவு செய்து அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலைக்கு பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மரக்கூட்டம் வரை நீண்ட வரிசையில் 9 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்த பக்தர்களுக்கு சுக்கு நீர், பிஸ்கட், உண்ணியப்பம் போன்றவை தேவஸ்தான தன்னார்வ தொண்டர்களால் வழங்கப்படுகிறது. மேலும் அய்யப்பா சேவா சங்கத்தினரும் உதவி செய்து வருகிறார்கள். ஆன்லைன் தரிசனத்திற்கு இதுவரை எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாததால், நேரடியாக நிலக்கல் வந்து உடனடி தரிசன முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதாவது சராசரி 10 ஆயிரம் பக்தர்கள் தினசரி இந்த வகையில் முன்பதிவு செய்து சபரிமலையில் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதன்படி நேற்று ஒரே நாளில் 70 ஆயிரம் பேர் வரை சாமி தரிசனம் செய்தனர். இதனால், சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தற்போது 17 மணி நேரம் சபரிமலையில் நடை திறந்து வழிபாடு நடக்கிறது. பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில், நடை திறப்பு நேரத்தை 18 மணி நேரமாக அதிகரிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அதாவது தினசரி மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதனை மாற்றி 3 மணிக்கு திறந்தால் கூடுதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com