அயோத்தி ராமர் கோவிலில் ஜக்கி வாசுதேவ் தரிசனம்

ராமர் கோவில் கல்லால் கட்டப்படவில்லை; தியாகத்தால் கட்டப்பட்டுள்ளதாக ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.
அயோத்தி ராமர் கோவிலில் ஜக்கி வாசுதேவ் தரிசனம்
Published on

சென்னை,

உத்தரபிரதேச மாநிலம் அயேத்தியில் கடந்த மாதம் 22-ந்தேதி ராமர் கோவில் திறக்கப்பட்டு, குழந்தை வடிவிலான ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிலையில், அயோத்தியில் ராமர் கோவிலில் ஜக்கி வாசுதேவ் இன்று தரிசனம் செய்தார். தொடர்ந்து, உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார்.

இதுகுறித்து, தனது 'எக்ஸ்' சமூகவலைதள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

ராமர் கோவில் கட்டுவதற்காக பல தலைமுறைகளாக ஈடுபட்ட மக்கள் அனைவருக்கும் என் நன்றிகள். இது வெறும் கல்லால் கட்டப்பட்ட கோவில் அல்ல. பக்தியாலும், விழிப்புணர்வான தியாகத்தாலும் கட்டப்பட்டுள்ளது. 500 ஆண்டு தொடர் போராட்டத்திற்கு பிறகு பக்தர்கள் ராமருக்கு கோவில் எழுப்பி உள்ளனர். ராமர் கடந்த காலத்தின் மிக பெரிய உத்வேகமாக மட்டுமல்லாது, எதிர்காலத்திற்கும் பொருத்தமானவராக விளங்குகிறார்.

உங்களுடைய சுய விருப்பு வெறுப்புகளும், ஆசைகளும், பாசங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை தான். அதேசமயம், அனைவருக்கும் பயன் தர கூட பொது நலன் என்று வரும் போது, உங்களுடைய தனிப்பட்ட விருப்பங்களை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு பயன் தர கூடிய செயல்களை நீங்கள் செய்ய வேண்டும். இதற்கு ராமர் ஒரு மிகச் சிறந்த உதாரணமாக வாழ்ந்தவர்.

எல்லாவற்றையும் விட வாழ்க்கை உங்கள் மீது எதை தூக்கி எறிந்தாலும், அதனால் பாதிப்படையாமல் நீங்கள் சமநிலையோடும், மனதின் அடிமைத்தனத்தில் சிக்கி கொள்ளாமல் சுதந்திரமாக வாழ முடியும் என்பதற்கு ராமர் முன் மாதிரியாக திகழ்கிறார்.

யோகி ஆதித்யநாத்தின் தொலைநோக்கு பார்வை, தலைமைத்துவம் உத்தரபிரதேசத்தை வளர்ச்சி மற்றும் கலாச்சாரத்தின் உருவகமாக மாற்றுவதற்கு வழிவகுக்கின்றன. மக்களின் நல்வாழ்வுக்கான அவரது சுறுசுறுப்பும், அர்ப்பணிப்பும் உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com