மூன்று வடிவாக வீற்றிருக்கும் காமாட்சி

காஞ்சி என்றவுடன் நம் நினைவுக்கு வருவது காமாட்சி அம்மன்தான். ‘காமாட்சி’ என்ற சொல்லுக்கு ‘கருணையும், அன்பும் நிறைந்த கண்களை கொண்டவள்’ என்று பொருள். அன்னை பராசக்தி அருளாட்சி செய்யும் சிறப்புமிக்க தலங்களாக இருப்பவை, காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி.
மூன்று வடிவாக வீற்றிருக்கும் காமாட்சி
Published on

கலைமகளான சரஸ்வதியையும், திருமகளான லட்சுமியையும் இரண்டு கண்களாகக் கொண்டு, லலிதா திரிபுரசுந்தரியின் பூரண சொரூபமாக இருப்பவள், காஞ்சி காமாட்சி அம்மன். காஞ்சியில் காட்சி தரும் காமாட்சி அம்மன், தனது இரண்டு கால்களை மடக்கி, பத்மாசன நிலையில் அமர்ந்திருக்கிறாள். கைகளில் கரும்பு-வில், தாமரை, கிளி தாங்கி இருக்கிறாள்.

பந்தகாசுரன் என்ற அசுரன், கடுமையான தவம் மேற்கொண்டான். அந்த தவத்தால், பிரம்மனிடம் இருந்து பல வரங்களைப் பெற்றான். அந்த வரங்களைக் கொண்டு மூவுலகங்களையும் கைப்பற்றி, தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தினான். இதையடுத்து தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.

அவரோ, 'பந்தகாசுரனை அழிக்கும் சக்தி படைத்தவள், பராசக்தி மட்டுமே' என்று கூறினார். இதனால் தேவர்கள், பார்வதியைத் தேடினர்.

அன்னையோ, காமகோட்டம் என்ற காஞ்சிபுரத்தில் ஒரு செண்பக மரத்தின் மீது கிளி உருவத்தில் அமர்ந்து ஈசனை நினைத்து தவம் செய்து கொண்டிருந்தாள். அங்கு வந்து அன்னையிடம் முறையிட்ட தேவர்களிடம், பந்தகாசுரனை அழிப்பதாக உறுதியளித்தாள். அதன்படி 18 கரங்கள் கொண்ட பைரவ ரூபிணியாக உருக்கொண்டு, பந்தகாசுரனை அழித்து, தலையை வெட்டி எடுத்து வந்தாள். அவளது உக்கிர வடிவத்தைப் பார்த்த அனைவரும் நடுங்கினர். இதனால் அழகிய பட்டாடை அணிந்த சிறுமியாக அன்னை மாறினாள். அன்னையின் உத்தரவுப்படி, பந்தகாசுரனின் தலையை ஓரிடத்தில் புதைத்து, அதனருகில் 24 தூண்களை நிறுவி, காயத்ரி மண்டபம் அமைத்தனர். அதன் நடுவில் அழகிய பீடத்தில் அன்னையின் உருவத்தை வைத்து வழிபட்டனர்.

காஞ்சியில் அன்னை மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். மூல விக்கிரகமாக ஸ்தூல வடிவிலும், அஞ்சன காமாட்சியாக சூட்சும வடிவிலும், ஸ்ரீசக்கரம் என்ற காரண வடிவிலும் அன்னை இங்கு வீற்றிருக்கிறாள். காமாட்சியின் இடது பக்கத்தில் வடக்கு திசை நோக்கியவாறு, அரூப லட்சுமியாகிய அஞ்சன காமாட்சி, தவம் புரியும் கோலத்தில் காட்சியளிக்கின்றாள். இது அன்னையின் சூட்சும வடிவம்.

காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களுக்கும், காஞ்சி காமாட்சி அம்மனே மூல மூர்த்தம் ஆவாள். அதனால் காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோவில்களில் அம்பாளுக்கு சன்னிதிகள் இருக்காது. அங்கு அம்மனின் உற்சவ மூர்த்தி மட்டுமே இருக்கும். 8-ம் நூற்றாண்டில் ஆதி சங்கரரால், இங்கு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் உற்சவ விழாக்கள் நடைபெறும். இவற்றில் தேர்த்திருவிழாவும், தெப்பக்குள உற்சவமும் சிறப்புக்குரியது. நவராத்திரி, ஆடி மற்றும் ஐப்பசி பூசம், சங்கர ஜெயந்தி மற்றும் வைகாசி மாத வசந்த உற்சவம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com