கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா: 27-ம் தேதி சூரசம்ஹாரம்

சூரசம்ஹார நிகழ்வில் கழுகுமலை மட்டுமன்றி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்கின்றனர்.‌
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா: 27-ம் தேதி சூரசம்ஹாரம்
Published on

தமிழகத்தின் தென் பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரை கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா நாளை (22.10.2025) தொடங்கி அடுத்த மாதம் 1ம் தேதி வரை (1.11.2025) நடைபெறுகிறது.

நாளை காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடைபெறும். அதை தொடர்ந்து 7 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் காலை மாலையில் சுவாமி, வள்ளி தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். 26-ம் தேதி சூரனின் தம்பி தாரகாசுரனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்வு கழுகுமலை திருத்தலத்தில் மட்டுமே நடைபெறும். வேறு எந்த திருத்தலத்திலும் நடைபெறாது.

விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் 27-ம் தேதி (திங்கள் கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை 12 மணிக்கு கோவிலில் சண்முகர் அர்ச்சனை வழிபாடு நடைபெறும். தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் சுவாமி வீரவேல் ஏந்தி வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி போர்க்களத்திற்கு வரும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் மாலை 5 மணியளவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கழுகுமலை மட்டுமன்றி சுற்றியுள்ள சுமார் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொள்கின்றனர்.

தொடர்ந்து இரவு 7 மணியளவில் கோவில் சீர்பாதம் தாங்கிகள் சார்பில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறும். 29-ம் தேதி இரவு 7 மணியளவில் சுவாமி, வள்ளி தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 30 ம் தேதி இரவு 7 மணியளவில் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், 31 ம் தேதி பட்டின் பிரவேசம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அடுத்த மாதம் நவம்பர் 1 ம் தேதி இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் கந்த சஷ்டி விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com