பழனியில் திருக்கல்யாண உற்சவம்.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருக்கலயாண நிகழ்வுக்குப் பின்னர் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் சப்பரத்தில் மலைக்கோவில் பிரகாரத்தை வலம் வந்து சன்னதியில் எழுந்தருளினார்.
பழனியில் திருக்கல்யாண உற்சவம்.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
Published on

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 22-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் உச்சிகால பூஜையில் சுவாமிக்கு கல்பபூஜை நடைபெற்றது. மேலும் தங்கச்சப்பரம், வெள்ளிச்சப்பரத்தில் சின்னக்குமாரர் புறப்பாடு நடந்தது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று இரவு அடிவாரம் கிரிவீதிகளில் நடைபெற்றது. அப்போது சக்தி வேல் கொண்டு முருகப்பெருமான் சூரனை வதம் செய்தார்.

விழாவின் நிறைவு நாளான இன்று காலை முருகன் கோவிலில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக காலை 9 மணிக்கு மேல் மலைக்கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருமண மேடையில் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார். தொடர்ந்து திருமண சடங்குகள் தொடங்கின. திருமண மேடைக்கு முன்பு பிரதான கலசம் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர் சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

பின்பு காலை 10.40 மணிக்கு சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், திருமாங்கல்யத்தை தெய்வானை மற்றும் வள்ளிக்கு அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா...! முருகனுக்கு அரோகரா...! என சரண கோஷம் எழுப்பி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

தீபாராதனை

கோவில் குருக்கள் செல்வசுப்பிரமணியம் மற்றும் குருக்கள்கள் திருமண மந்திரங்களை ஓதினர். பின்பு கந்தசஷ்டி விழாவின் சிறப்பு குறித்து விளக்கி கூறப்பட்டது. தொடர்ந்து சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை தீபாராதனை, மகா தீபாராதனை காட்டப்பட்டது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் சப்பரத்தில் மலைக்கோவில் பிரகாரத்தை வலம் வந்து சன்னதியில் எழுந்தருளினார்.

திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி கோவில் அன்னதான கூடத்தில் திருமண சிறப்பு விருந்து நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு உணவருந்தினர். திருக்கல்யாண நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து உதவி ஆணையர் லட்சுமி மற்றும் கோவில் அலுவலர்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர். மேலும் கந்த சஷ்டி திருவிழா திருக்கல்யாண நிகழ்ச்சியை முன்னிட்டு பழனி மலை கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com