காரைக்கால் மாங்கனித் திருவிழா கோலாகலம்: பிச்சாடனர் வீதி உலா.. மாங்கனிகளை வீசி பக்தர்கள் வழிபாடு

மக்கள் தங்களின் வீடுகளின் மாடியில் அல்லது பால்கனியில் அருந்து மாங்கனிகளை பிச்சாடனரை நோக்கி வீசி வழிபட்டனர்.
Published on

காரைக்கால்:

சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் பிறந்த ஊரில் அவருக்கு ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. காரைக்கால் அம்மையார், அடியாராக வந்த ஈசனுக்கு சாப்பிட மாங்கனி படைத்ததையும், அவருக்கு சிவபெருமான் மாங்கனி அருளியதையும் நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஆனி மாத பவுர்ணமியை ஒட்டி இவ்வாலயத்தில் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது.

அவ்வகையில் இந்த ஆண்டிற்கான மாங்கனி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முதல் நாள் மாலையில் மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது. இரண்டாம் நாளான நேற்று காலையில் பரமதத்தருக்கும், காரைக்கால் அம்மையாருக்கும் (புனிதவதியார்) திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மாலையில் சிவபெருமான் பிச்சாடனர் கோலத்தில் வெள்ளை சாத்தி புறப்பாடு நடைபெற்றது. இரவு 10 மணிக்கு முத்துப்பல்லக்கு உற்சவம் நடைபெற்றது.

ஆனி பௌர்ணமியான இன்றைய தினம் (10.7.2025) விழாவின் சிகர நிகழ்வான மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதையொட்டி அதிகாலையில் பிச்சாடனர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. காலை 9 மணியளவில் பிச்சாடனர் வீதி உலா தொடங்கியது. வீதியின் இருபுறமும் மக்கள் தங்களின் வீடுகளின் மாடியில் அல்லது பால்கனியில் அருந்து மாங்கனிகளை பிச்சாடனரை நோக்கி வீசி வழிபட்டவண்ணம் உள்ளனர். கீழே நிற்கும் பக்தர்கள் அந்த மங்கனிகளை பிடித்து பிரசாதமாக உட்கொள்கிறார்கள்.

மாங்கனி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காரைக்கால் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com