தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்: பூஜைகள் முழு விவரம்

தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா 7.4.2025 அன்று நடைபெறுகிறது.
தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்: பூஜைகள் முழு விவரம்
Published on

தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்யப்பட்டு புனரமைக்கப்பட்டன. மகா மண்டபம், பிரகார மண்டபம், கொடிமரம், மாடமதில், ராஜகோபுரம், விமான கோபுரங்கள், சுதை வேலை, பஞ்சவர்ணம் பூசுதல், ஸ்தூபி ஸ்தாபனம், தீர்த்தக்குளம் புனரமைப்பு என அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

கும்பாபிஷேக பூஜைகள் வருகிற 3-ந் தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அன்று காலை 5 மணிக்கு ராஜ அனுக்ஜை, (பராக்கிரம பாண்டிய மன்னர் வழிபடுதல்), விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், பாத்ர பூஜை, தன பூஜை, விப்ரனுக்ஞை, கிராம தேவதானுக்ஞை, ஸ்ரீமகா கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. காலை 8.30 மணிக்கு பிரம்மச்சாரி பூஜை, கஜபூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. மாலையில் தீர்த்தம் எடுத்து வருதல், ஹோமம் ஆகியவை நடக்கிறது.

4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு சாந்தி ஹோமம், திசா ஹோமம், ஸம்ஹிதா ஹோமம், மூர்த்தி ஹோமம், பிரசன்னாபிஷேகம், யாகசாலை ஸ்தண்டிலம் அமைத்தல், காலை 10.15 மணிக்கு விநாயகர் முதலான பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது. மாலை 5 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது.

தொடர்ந்து 7-ந் தேதி வரை 6 கால யாக சாலை பூஜைகள் நடைபெறுகின்றன. 7-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் உலகம்மன் உடனுறை காசி விசுவநாத சுவாமி கோபுரங்கள், விமான கேபுரங்கள், மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

கும்பாபிஷேக நாட்களில் சதுர்வேத பாராயணம், திருமுறை பாராயணம் நடக்கிறது. கும்பாபிஷகேத்தை தூத்துக்குடி ஆலால சுந்தர வேத சிவாகம பாடசாலை முதல்வர் செல்வம்பட்டர், ஆலய தலைமை அர்ச்சகர் செந்தில் ஆறுமுகம் பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார் குழுவினர் நடத்தி வைக்கின்றனர்.

கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி மேற்பார்வையில் உதவி ஆணையர் தங்கம், அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் பொன்னி, ஆய்வாளர் சரவணக்குமார், அறங்காவலர்கள் முருகேசன், புவிதா, சஷீலா குமார், மூக்கன் மற்றும் உபயதாரர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com