குலசை தசரா திருவிழா கோலாகலம்; துர்கை கோலத்தில் எழுந்தருளிய அம்மன்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குலசை தசரா திருவிழா கோலாகலம்; துர்கை கோலத்தில் எழுந்தருளிய அம்மன்
Published on

உடன்குடி,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பிரசித்திபெற்ற ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்கு நடைபெறும் தசரா திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.இந்த ஆண்டு தசரா திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பல நாட்களுக்கு முன்பாகவே விரதம் இருக்க தொடங்கிவிட்டனர். நேற்று முன்தினம் காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சகஸ்ரநாமம் அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, பரத நாட்டியம், வில்லிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பக்தர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த தசரா திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பல்லக்கில் கொடிப்பட்டம் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் ஏற்றப்பட்டு ரதவீயை சுற்றி வந்தது. பின்னர் வேதமந்திரங்கள் முழங்க அதிகாலை 5.36 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் பட்டர் அய்யப்பன் திருக்கொடியேற்றினார்.

அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் ஓம் காளி, ஜெய் காளி என பரவசமாக கோஷமிட்டனர். தொடர்ந்து கொடிமரத்திற்கு இளநீர், தேன், மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, உள்பட 16 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகங்களும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் வழிபட்டனர்.

விரதம் இருந்த பக்தர்கள் கோவில் பூசாரியிடம் மஞ்சள் கயிற்றிலான காப்பு அணிந்து கொண்டனர். தொடர்ந்து நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை பிரிக்க தொடங்கினர். காலை, இரவு நேரத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.இரவில் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தசரா திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமையில் 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 6 உதவி போலீஸ் சூப்பிரண்டு, போலீசார், ஊர்க்காவல் படை உள்பட 850-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com