மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
Published on

கோவை,

கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் 7-ம் படை வீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது.

இதைத்தொடர்ந்து கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு இன்று (4-ந்தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. கோவிலில் பிரமாண்ட யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகளும் நடந்து வருகின்றன. கோபுரங்களில் புதிய கலசங்கள் பொருத்துதல் உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. கோவில் முழுவதும் மின் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று (4-ந் தேதி) காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் நடக்கிறது. அதிகாலை 4.30 மணிக்கு 6-ம் கால வேள்வி பூஜை, காலை 6 மணி முதல் 6.45 மணிக்குள் திருச்சுற்று தெய்வங்களுக்கு, பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், காலை 7.30 மணிக்கு யாகசாலையில் இருந்து மூலவருக்கு திருக்குடங்கள் ஏந்தி கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.

காலை 8.30 மணிக்கு மருதாசல மூர்த்தி கோபுர விமானம், ஆதி மூலவர் கோபுர விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பரிவார கோபுர விமானங்களுக்கு கும்பாபிஷேகம், காலை 9 மணிக்கு ஆதி மூலவர், விநாயகர், மருதாசலமூர்த்தி, பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, வீரபாகு, கரிவரதராஜ பெருமாள், சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து மூலவருக்கு பேரொளி வழிபாடு நடைபெறுகிறது.

டிரோன் உதவியுடன் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காணும் வகையில் பெரிய எல்.இ.டி. திரைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. கும்பாபிஷேகத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறது. இதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com