ஆலங்குடி குருபரிகார கோவிலில் லட்சார்ச்சனை நிறைவு விழா

நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோவில் நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.
Published on

நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோவில், நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது. நவக்கிரகங்களில் குரு பகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. வருடம் தோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இவ்வாண்டும் கடந்த 11 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை குருபாகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியடைந்த நாளில் ஆலங்குடி கோவிலில் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா கடந்த15 ம் தேதி வியாழக்கிழமை தொடங்கியது. நாள்தோறும் உற்சவ தெட்சிணாமூர்த்தி சன்னதியில் லட்சார்ச்சனை நடைபெற்றது. இன்று லட்ச்சார்ச்சனை நிறைவு விழா நடைபெற்றது.

இதனை முன்னிட்டு கோவிலில் கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், உற்சவ தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டிருந்தது. உற்சவதெட்சிணாமூர்த்திக்கும் சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டது. உற்சவ தெட்சிணாமூர்த்தி சன்னதியில் ஜோதி ராமலிங்க சிவாச்சாரியார், சுவாமிநாத சிவாச்சாரியார், ஞானஸ்கந்த சிவாச்சாரியார் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் லட்சார்ச்சனையை நடத்தி வைத்தனர்.

விழாவில், கோவில் செயல் அலுவலர் சுரேஷ், தக்கார் சொரிமுத்து, கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குரு பகவானை தரிசனம் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com