சிறப்புக்குரிய சிவாலயங்கள்

பெருமாள் கோவிலில்தான் சடாரி வைப்பார்கள். காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சடாரி வைத்து ஆசி வழங்குகிறார்கள்.
சிறப்புக்குரிய சிவாலயங்கள்
Published on

* பொதுவாக பெருமாள் கோவிலில்தான் சடாரி வைப்பார்கள். ஆனால் காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில், ஆந்திராவில் உள்ள காளகஸ்தி சிவாலயம், சுருட்டப்பள்ளியில் உள்ள சிவன் கோவில் ஆகியவற்றிலும் சடாரி வைத்து ஆசி வழங்குகிறார்கள்.

* திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோவிலில் உள்ள சிவபெருமானது பெயர் 'சந்திரமவுலீஸ்வரர்.' அவர் மும்முக லிங்கமாக தரிசனம் அளிக்கிறார். அதில் கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் என்றும், வடக்கு முகம் வாமதேவ முகமாகவும், தெற்கு முகம் அகோர மூர்த்தியாகவும் வணங்கப்படுகிறது.

* ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமான், அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய காட்சியை காசியில் உள்ள அனுமன்கட் என்ற இடத்தில் அமைந்த காமகோடீஸ்வரர் கோவிலில் காணலாம். இதே தரிசனத்தை, சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் ஆலயத்திலும் காண முடியும்.

* பெங்களூருக்கு அருகே சிவகெங்கா என்ற இடத்தில் உள்ள சிவலிங்கத்தின் மேல் நெய்யை வைத்தால் அது வெண்ணெய்யாக மாறுகிறது. இந்த வெண்ணெய்யை வீட்டுக்குக் கொண்டு வரலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.

* தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோவிலில் உள்ள ராஜகம்பீர மண்டபத்தில் மூன்று தலையுடன் கூடிய அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார்.

* ஐந்துமுகம் கொண்ட சிவபெருமான் ஏழு தலங்களில் அருள்புரிகிறார். அவை, 1. காசி, 2. நேபாளம், 3. காளஹஸ்தி, 4. திருவானைக்காவல், 5. சித்தேஸ்வர் மகாதேவ், 6. ராசிபுரம், 7. காஞ்சிபுரம் கயிலாசநாதா கோவில்.

* தஞ்சை மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது நாலூர் திருமயானம். இங்கு உள்ள சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி பலாபழம் போன்று முள் முள்ளாக உள்ளது. சுவாமியின் பெயர் 'பிலாச வனேஸ்வரர்.'

* மயிலாடுதுறை அருகே திருவிற்குடியில் உற்சவமூர்த்தியான சிவபெருமான் நான்கு திருக்கரங்களுடன் அருள்கிறார். மேல் இரு கரங்களில் மான், மழு தாங்கியிருக்கும் அவர், கீழ் இரு கரங்களில் ஒன்றில் சக்கரத்தை தாங்கியிருக்கிறார். மற்றொரு கரம் ஆசி வழங்கும் தானியில் உள்ளது. இந்த சிவபெருமானுக்கு, துளசியால் அர்ச்சனை செய்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com