ஆவணி மூலத்திருவிழா 8-ம் நாள்: மாணிக்கவாசகரை காக்க நரிகளை பரிகளாக்கி, அழைத்து வந்த சிவபெருமான்

வடக்கு ஆடி வீதியில் உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன், பரிகளை நரிகளாக்கிய திருவிளையாடலுக்குரிய சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தனர்.
ஆவணி மூலத்திருவிழா 8-ம் நாள்: மாணிக்கவாசகரை காக்க நரிகளை பரிகளாக்கி, அழைத்து வந்த சிவபெருமான்
Published on

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்துவரும் ஆவணி மூலத்திருவிழாவில் சிவபெருமானின் திருவிளையாடல்களை பக்தர்களுக்கு உணர்த்தும் திருக்கோலங்களில் நாள்தோறும் சுந்தரேஸ்வரர் காட்சி அளித்து வருகிறார்.

நேற்று 8-ம் நாளாக நரியை பரியாக்கியது பற்றிய திருவிளையாடல் அலங்காரம் நடந்தது. அப்போது, வடக்கு ஆடி வீதியில் உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன், இந்த திருவிளையாடலுக்குரிய சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தனர். இந்த திருவிழாவுக்காக திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து முருகப்பெருமானும், திருவாதவூரில் இருந்து மாணிக்கவாசகரும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர்.

பின்னர் சுவாமி, அம்மன் தங்கக்குதிரைகளில் எழுந்தருளி ஆவணி மூல வீதிகளை வலம் வந்தனர். விழாவில் பாண்டிய மன்னன் போல் செந்தில் பட்டர் குதிரையில் வந்து, இந்த திருவிளையாடல் நடந்த விதம் பற்றி பக்தர்களுக்கு விளக்கினார்.

நரிகளை பரிகளாக்கிய திருவிளையாடல் பற்றிய புராண வரலாறு வருமாறு:-

மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியனிடம் தென்னவன் பிரம்மராயன் என்ற பட்டத்துடன் அமைச்சராக மாணிக்கவாசகர் பணியாற்றி வந்தார். அப்போது, படைக்கு தேவைப்படும் குதிரைகள் வாங்க மன்னன், பெரும் பொருளுடன் மாணிக்கவாசகரை அனுப்பி வைத்தார். அவர் திருப்பெருந்துறை எனும் தலத்தை அடைந்தவுடன் இறைவனை குருவாக பெற்ற மாணிக்கவாசகர் அங்கேயே சிவாலய திருப்பணி மற்றும் சிவனடியார் திருப்பணி என தான் கொண்டு வந்த அனைத்து பொருளையும் செலவிட்டார்.

இந்த நிலையில அரசனிடம் இருந்து அழைப்பு வந்தது. அப்போது எந்த பொருளும் இல்லாமல் வெறுங்கையாக இருந்த மாணிக்கவாசகர் செய்வதறியாது இறைவனை வேண்டினார். இறைவன் அவரிடம், ஆவணி மூலத்தன்று குதிரைகள் வந்து சேரும் என்று அரசனிடம் கூறும்படி தெரிவித்தார். ஆவணி மூலத்திருநாளும் வந்தது. ஆனால் குதிரைகள் வராதது கண்டு மன்னன் மாணிக்கவாசகரை சிறையில் அடைத்து துன்புறுத்தினார்.

மாணிக்கவாசகர் தன் வேதனைகள் குறித்து இறைவனிடம் வேண்டினார். உடனே இறைவன், காட்டிலுள்ள நரிகளை எல்லாம் குதிரைகளாக்கி (பரிகள்), சிவகணங்களை குதிரைகளின் பாகன்களாக்கி, தானே அவற்றுக்கு தலைவனாக ஒரு குதிரையின் மீதேறி மதுரையை வந்தடைந்தார். அதைக்கண்ட அரசனும் மகிழ்ந்து மாணிக்கவாசகரை பாராட்டி விடுவித்தார்.

ஆனால் அன்று இரவே அந்த குதிரைகள் எல்லாம் மீண்டும் நரிகளாக மாறி காடுகள் நோக்கி ஓடின. உடனே அரசன் மாணிக்கவாசகரை தண்டிக்க அவரை கட்டி சுடுமணலில் கிடக்கச்செய்தார். இறைவன் அவரை காக்கும் பொருட்டு வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்க செய்தார். அப்போதுதான் இறைவனின் திருவிளையாடலையும், மாணிக்கவாசகரின் இறைப்பணியையும் பாண்டிய மன்னன் அறிந்து, மாணிக்கவாசகரிடம் மன்னிப்பு கோரினார் என புராண வரலாறு கூறுகிறது.

ஆவணி மூலத்திருவிழாவில் 9-ம் நாள் சிறப்பு அலங்காரமாக இன்று (புதன்கிழமை) பிட்டுக்கு மண் சுமந்த திருக்கோலத்தில் சுந்தரேஸ்வரர் காட்சி தருகிறார்.

இதற்காக சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பாடாகி ஆரப்பாளையம் கிராஸ் ரோடு வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள புட்டுத்தோப்பு மண்டபத்திற்கு செல்வார்கள்.

அங்கு மதியம் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நடைபெறும். சுவாமி, அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு மீண்டும் கோவிலுக்கு வரும் வரை நடை சாத்தப்பட்டு இருக்கும். அந்த நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. சுவாமி இரவு கோவிலுக்கு வந்த பிறகு மீண்டும் நடை திறந்து பூஜைகள் நடைபெறும். ஆனால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக அன்னதானம், ஆடி வீதிகள் மற்றும் ஆயிரம்கால் மண்டபம் ஆகியவை திறக்கப்பட்டு இருக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com