பக்தியில்லை.. விரதம் இல்லை.. ஆனாலும் வேடனுக்கு முக்தி அளித்த இறைவன்!

வேடன் பக்தி எதுவும் இல்லாமல் பறித்து போட்ட வில்வ இலைகளை இறைவன் அர்ச்சனையாக ஏற்றுக்கொண்டார்.
பக்தியில்லை.. விரதம் இல்லை.. ஆனாலும் வேடனுக்கு முக்தி அளித்த இறைவன்!
Published on

தஞ்சை மாவட்டம் திருவைக்காவூரில் வில்வனேஸ்வரர் கோவில் உள்ளது. ஒரு காலத்தில் இந்த ஆலயத்தில் தவநிதி என்ற முனிவர் தங்கியிருந்து வழிபட்டு வந்தார். அப்போது மான் ஒன்றை வேட்டையாட வேடன் ஒருவன் துரத்தி வந்தான். தப்பி ஓடிய மான் ஆலயத்திற்குள் புகுந்து தவநிதி முனிவரை தஞ்சமடைந்தது. முனிவர் அதற்கு அபயம் அளித்தார்.

இதனால் கோபம் கொண்ட வேடன் முனிவரை தாக்க தயாரானான். அடியாரின் துயரை நீக்க இறைவன் புலிவேடம் கொண்டு வேடனை துரத்தினார். உயிருக்கு பயந்த வேடன் அங்கிருந்த வில்வ மரத்தில் ஏறிக் கொண்டான். அவனை துரத்திய புலி மரத்தின் கீழே இருந்தது. இரவு நேரம் நெருங்கியும் புலி அந்த இடத்தைவிட்டு செல்வதாக இல்லை.

இதனால் வேடன் மரத்திலேயே தங்கி இருந்தான். பசியாலும், பயத்தாலும் அவனுக்கு தூக்கம் வந்தது. தூக்க கலக்கத்தில் கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காகவும் தன்னை தானே விழிப்புடன் வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் விடிய விடிய மரத்தில் இருந்து ஒவ்வொரு இலைகளாக பறித்து கீழே போட்டுக் கொண்டு இருந்தான். அவன் பறித்து போட்ட வில்வ இலைகள் கீழே புலி வடிவில் இருந்த சிவபெருமான் மீது விழுந்து கொண்டிருந்தது. இதை அர்ச்சனையாக ஏற்றுக்கொண்டார் இறைவன். அன்றைய தினம் சிவராத்திரி என்பதால் தூக்கமின்றி சிவனை வழிபட்ட புண்ணியம் அந்த வேடனுக்கு கிடைத்தது. இறைவன் வேடனுக்கு மோட்சம் அளித்து அருளினார்.

விடிந்தால் வேடனின் ஆயுள் முடியும் நிலை இருந்தது. பொழுது விடிந்ததும் அவனது உயிரை பறிக்க எமன் ஆலயத்திற்குள் நுழைந்தான். உடனே தட்சிணாமூர்த்தி வடிவில் தோன்றிய இறைவன், கையில் கோலேந்தி எமனை விரட்டினார். எமனும் விடவில்லை. இதனால் சிவனின் கோபத்திற்கு ஆளான நந்தி, தனது சுவாசத்தினால் எமனை உள்ளே நுழையாமல் தடுத்தார். இதனால் வேடன் தனக்கு இருந்த மரண யோகம் நீங்கி முக்தி பெற்றான் என்று புராணங்கள் சொல்கின்றன. இதை நினைவுபடுத்தும் வகையில் இந்த ஆலயத்தின் நந்தி, வாயிலை நோக்கியவாறும், தட்சிணாமூர்த்தி கையில் கோலேந்தியும் காட்சி தருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com