புதிய ஜெகநாதர் கோவிலில் முதல் ரத யாத்திரை... மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார்

தேர்களுக்கு மம்தா பானர்ஜி பூஜை செய்து வழிபட்டதுடன், தேர்கள் புறப்பட்டு செல்லும் பாதையை தங்க துடைப்பத்தால் சுத்தம் செய்தார்.
புதிய ஜெகநாதர் கோவிலில் முதல் ரத யாத்திரை... மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார்
Published on

திகா (மேற்கு வங்காளம்):

ஜெகநாதரின் 12 யாத்திரைகளில் ரத யாத்திரை மிகவும் புனிதமானது, பிரபலமானது. ஒடிசா மாநிலம் பூரியில் நடைபெறும் ரத யாத்திரை உலகப் புகழ்பெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தரிசனம் செய்வார்கள். இதேபோல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், வெளி நாடுகளிலும் ஜெகநாதர் ரத யாத்திரை நடைபெறும். அவ்வகையில் இன்று ஜெகநாதர் ரதயாத்திரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்காளத்தின் திகா நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜெகநாதர் கோவிலில் முதல் முறையாக ரத யாத்திரை நடைபெற்றது. இதற்காக பூரி நகரில் செய்யப்பட்டுள்ள தேர்களைப் போன்று மூன்று பிரமாண்ட தேர்கள் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டன.

இன்று காலையில் ரத யாத்திரைக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றன. கோவிலில் இருந்து மூலவர்களான ஜெகநாதர், பாலபத்திரர், தேவி சுபத்ரா ஆகியோரை தேர்களில் எழுந்தருளச் செய்தனர். பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்துகொண்டு தேர்களுக்கு பூஜை செய்து வழிபட்டார். அதன்பின்னர் தேர்கள் புறப்பட்டு செல்லும் பாதையை தங்க துடைப்பத்தால் சுத்தம் செய்து, ரத யாத்திரையை தொடங்கி வைத்தார். பக்தர்கள் ஜெய் ஜெகநாதர் என்ற பக்தி முழக்கமிட்டபடி தேர் இழுத்தனர். இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர்.

ரத யாத்திரை சுமுகமாக நடைபெறுவதற்காக யாத்திரை நடைபெறும் 1 கிமீ தொலைவிலும், பக்தர்கள் ஓரமாக நின்று தரிசன்ம செய்வதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் அந்த தடுப்புகளுக்கு பின்னால் நின்று தேர்களை தரிசனம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தேர்களின் வடம் பிடித்து இழுக்க அனுமதிக்கப்படவில்லை. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com